(உ.வே.சா.வின் என் சரித்திரம் 64 : யான் பெற்ற நல்லுரை – தொடர்ச்சி)

நல்லுரை

சில மாதங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியிலிருந்து சதாசிவம் பிள்ளை வந்தான். இந்தத் துறைசையந்தாதியை அவன் எடுத்துவந்து பாடஞ் சொல்லும்படி தொந்தரவு செய்தான். நான் படித்துப் பார்த்தேன்; ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஐயா அவர்களிடத்திலேயே போய்க் கேட்டுக்கொள்’ என்று அனுப்பிவிட்டேன். அங்கே தங்களிடம் வந்திருப்பானே?”

“வரவில்லை”

“அவனைப்போல இன்னும் யாராவது வந்து அருத்தம் சொல்லவேண்டுமென்று உபத்திரவம்பண்ணினால் இவரிடம் தள்ளிவிடலாமே என்ற எண்ணத்தினாலேதான் இந்தக் கேள்வி கேட்டேன்.”

‘ஆற்றிலே போட்டுவிடுங்கள்’

அப்போது ஆறுமுகத்தா பிள்ளை செட்டியாரை நோக்கி, “நீங்கள், ஐயா முன்பு செய்த நூல்களெல்லாம் கேட்டிருக்கிறீர்களோ? ஐயா, இளமைக்காலத்தில் பட்டீச்சுரத்திற்கு ஒரு பதிற்றுப் பத்தந்தாதி செய்திருக்கிறார்கள். அதைப் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

“என்ன? பட்டீச்சுரத்துக்கு அந்தாதியா? நான் படித்ததில்லையே! எங்கே உங்களுக்கு ஞாபகம் இருந்தால் ஒரு பாடல் சொல்லுங்கள், பார்ப்போம்” என்றார் செட்டியார்.

ஆறுமுகத்தாபிள்ளை உடனே அந்நூலிலிருந்து ஒரு செய்யுளைச் சொன்னார் அதைச் செட்டியார் கேட்டார்; கேட்டபின் ஆறுமுகத்தா பிள்ளையையும் ஆசிரியரையும் ஏற இறங்கப் பார்த்தார்; “இந்தப் பாட்டு பிள்ளையவர்கள் செய்ததென்று எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

“ஏன் தெரியாது? எங்கள் ஊர்ப் பிரபந்தத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா? எங்கள் தகப்பனார் காலத்தில் ஐயா இயற்றியது இது.”

“இப்புத்தகம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் யாருக்கும் சொல்லாமல் கிழித்து ஆற்றிலே போட்டுவிடுங்கள். நீங்களும் அப்பாடல்களை மறந்து விடுங்கள்; ஐயா இப்படி ஒரு நூல் இயற்றியதாக யாரிடத்திலும் இனிமேற் பிரத்தாபம் செய்யவேண்டா”

“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?”

“ஏனா? இப்போது ஐயா செய்கிற பாடல்களைக் கேட்டவர்களிடம் இப்பாடல்களைப் பற்றிச் சொன்னால் நம்பவே மாட்டார்கள். உங்களுக்குப் பைத்தியக்காரப் பட்டம் கட்டிவிடுவார்கள். இப்போதெல்லாம் ஐயா செய்யும் பாடல்கள் எவ்வளவு ‘தங்கந் தங்கமாக’ இருக்கின்றன! பூசை வேளையிற் கரடியைவிட்டு ஓட்டினாற்போல நல்ல நல்ல பாடல்களைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் இப்பாட்டைச் சொல்ல வந்துவிட்டீர்களே!”

ஆறுமுகத்தா பிள்ளை சொன்ன செய்யுள் நன்றாகவே இருந்தது.

வரைமா திருக்கு மொருகூறும்
மழுமா னணிந்த திருக்கரமும்
அரைசேர் வேங்கை யதளுடையும்
அரவா பரணத் தகன்மார்பும்
விரைசேர் கொன்றை முடியுமறை
மேவு மடியும் வெளித்தோற்றி
நரைசேர் விடையான் றிருப்பழைசை
நகரி லருளப் பெற்றேனே”

என்பதே அச்செய்யுள். அதில் யமகம் இல்லை; திரிபு இல்லை; அரிய சைவ சித்தாந்த சாத்திரக் கருத்தும் இல்லை. ஆனாலும் எளிய நடையும் அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் பொருளும் உள்ளன. செட்டியார் அதைக் குறைகூறியது எனக்கு அப்பொழுது பொருத்தமாகத் தோற்றவில்லை. அதோடு அவர் முன்னுக்குப்பின் முரண்பாடாகவே பேசுபவரென்றுகூட நினைத்தேன். துறைசை யமக அந்தாதி முதலியவற்றிற்கு எளிதில் பொருள் விளங்கவில்லை என்று அவர் முதலில் கூறினார். எளிதில் பொருள் விளங்கும் இந்தப் பாடலில் அழகில்லை என்றார்.

ஆறுமுகத்தா பிள்ளைக்குப் பாடல்களின் உயர்வு தாழ்வைப் பற்றிய கவலை உண்டாகவில்லை. தங்கள் ஊர் விசயமாகப் பிள்ளையவர்கள் செய்த நூலை, அவர் அருமையாகப் பாராட்டுபவர். அதைச் செட்டியார் குறைகூறியபொழுது அவருக்குச் சிறிது வருத்தமுண்டாயிற்று.

“ஐயாவையே கேட்டுப் பாருங்கள். இந்த அந்தாதி அவர்கள் பாடியதுதான் என்று தெரியவரும். ஐயா அவர்கள் வாக்கை நீங்கள் தூசிப்பது நன்றாக இல்லை” என்று ஆறுமுகத்தா பிள்ளை செட்டியாரிடம் சொன்னார்.

“ஐயாவைத்தான் கேட்கலாமே” என்று சொல்லிக்கொண்டே செட்டியார் ஆசிரியரைப் பார்த்து, “இவர் ஏதோ சொல்கிறாரே; இது நிசந்தானா? இந்த மாதியும் நீங்கள் ஒரு நூல் இயற்றியதுண்டா? இவருக்காகச் சொல்லவேண்டா. ஞாபகப்படுத்திக்கொண்டு சொல்லுங்கள். இத்தகைய நூலை நீங்கள் எதற்காகச் செய்தீர்கள்?” என்பன போன்ற கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.

எல்லாவற்றையும் மிக்க பொறுமையுடனே கேட்டுக்கொண்டிருந்த பிள்ளையவர்கள், “என்னப்பா தியாகராசு, மேலே மேலே ஓடுகிறாயே; இந்த மாதிரியான பிரபந்தத்தை நான் செய்திருக்கக் கூடாதா? இதிலே ஏதாவது பிழை இருக்கிறதா? எளிய நடையில் பாடல் செய்வது தவறா? சாதாரண சனங்களும் படித்துப் பொருளறியும்படி இருந்தால் நல்லதுதானே? கடினமாக இருந்தால் கடினமல்லவா?” என்று கூறினர்.

கேட்ட செட்டியார், “அப்பாடியானல் சரி; உங்களுக்கு இதனால் அகௌரவம் வரக்கூடாதென்பதுதான் என் விருப்பம். சரி; நேரமாகிவிட்டது; புறப்படலாமே” என்றார்.

செட்டியார் இவ்வளவு சகசமாகப் பிள்ளையவர்களிடம் பேசுவாரென்று நான் நினைக்கவில்லை. அவர் தம் அன்பினாலும் பணிவினாலும் மாணாக்கராகப் புலப்படுத்திக்கொண்டார். பேச்சிலோ மனமொத்துப் பழகும் நண்பரைப் போலவே பேசினார். தம் மனத்திலுள்ள அபிப்பிராயங்களை ஒளிவுமறைவின்றி மரியாதைக்குப் பயந்து மனத்துக்குள்ளே வைத்துக்கொண்டு பொருமாமல் வெளியிட்டார். இவ்வளவு வெளிப்படையாகத் தம் அபிப்பிராயங்களை அவர் சொல்லுவதை முதல் முதலாகக் கேட்பவர்கள், ‘அவர் மரியாதை தெரியாதவர், முரடர், அகங்காரி’ என்றே எண்ணக்கூடும். அவருடைய அந்தரங்க இயல்பை அறிந்துகொண்டவர்களுக்கு அவர் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுபவரல்லரென்பதும் தமக்குத் தோற்றிய அபிப்பிராயங்களைத் தோற்றியபடியே தெளிவான வார்த்தைகளிலே சொல்லிவிடுபவரென்பதும் தெரியவரும்.

நல்லுரை

செட்டியார் எழுந்தார். நாங்களும் எழுந்தோம். “ஐயாவிடம் நீர் நன்றாகப் பாடங் கேட்டுக்கொள்ளும். இவர்களுடன் இருப்பதையே ஒரு கௌரவமாக எண்ணிக்கொண்டு சோம்பேறியாக இருந்துவிட வேண்டா. கொஞ்சகாலம் இருந்துவிட்டு எல்லாம் தெரிந்துவிட்டதாக எண்ணி ஓடிப்போய்விடவும் கூடாது. இம்மாதிரி பாடஞ் சொல்பவர்கள் வேறு எங்கும் பார்க்க முடியாது. உம்முடைய நன்மையை உத்தேசித்துச் சொல்லுகிறேன்” என்று செட்டியார் என்னைப் பார்த்துச் சொன்னார். அவ்வார்த்தைகள் எனக்குச் சிறந்த ‘நல்லுரை’களாக இருந்தன. மற்றவர்களெல்லாம் பிள்ளையவர்கள் பெருமையையும் என் பாக்கியத்தையும் பாராட்டிப் பேசுவதையே கேட்டிருந்தேன். செட்டியாரோ நான் இன்னவாறு இருக்க வேண்டுமென்பதைச் சொன்னார். அவர் என்னைப் பாராட்டவில்லை; அதனால் என்ன? என் வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளும் வழியைச் சொன்னார். அவர் கூறிய அனுபவ சாரமான வார்த்தைகள் எனக்கு அமிர்தம்போல இருந்தன.

செட்டியாரும் அவருடன் வந்தவர்களும் விடைபெற்றுச் சென்றனர். நாங்கள் வண்டியில் ஏறிவந்து பட்டீச்சுரத்தை அடைந்தோம்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.