(உ.வே.சா.வின் என் சரித்திரம் 120: அத்தியாயம்-82 சோதனையில் வெற்றி- தொடர்ச்சி)

“கடைசியில் என்னிடமே தள்ளிவிட்டீர்களா? சரி. என்ன விசயத்தை அமைக்க வேண்டுமோ அதையும் சொல்லி விடுங்கள்” என்றார் செட்டியார். அப்போது சிரீநிவாசையர், “மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் நீங்கள் முதலிற் படித்தவர்கள். நான் பின்பு படித்தவன். இதனால் சேசுட்ட கனிசுட்ட முறை நம் இருவருக்கும் உண்டு. இந்த முறையால் நீங்கள் இதுவரை பார்த்து வந்த வேலையை எனக்குச் செய்விக்க வேண்டும். இந்தக் கருத்தை வைத்து ஐந்து நிமிசங்களில் அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தமொன்று இயற்றிச் சொல்ல வேண்டும்” என்று சொன்னார்.

எல்லோரும் மௌனமாக இருந்தார்கள். செட்டியார் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் கவலைக் குறி படர்ந்தது. நான் விசயத்தை வாங்கிக் கொண்டு மனத்துக்குள் பாடலை அமைத்து வந்தேன். செட்டியார் என்மேல் வைத்த கண் வாங்கவில்லை. நான் பாடுவேனோ மாட்டேனோ என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது போலும் நான்கு நிமிசங்கள் ஆயின. ஐந்தாவது நிமிசத்தில்,

“வாய்ந்தபுகழ் படைத்திலங்கு மீனாட்சி

சுந்தரநா வலவன் பாலே

ஏய்ந்ததமிழ் ஆய்ந்தமுறைக் கியைவுறநீ

இதுகாறும் இனிதின் வேய

ஆய்ந்தவள நகர்க்குடந்தைக் காலேசில்

நின்னிடமெற் களித்தல் நன்றே

வேய்ந்ததமிழ் முதற்புலமைத் தியாகரா

சம்பெயர்கொள் மேன்மை யோனே”

என்று கூறி முடித்ததுதான் தாமதம். செட்டியார் குதித்து எழுந்து, “என் வயிற்றில் பாலை வார்த்தீரையா!” என்று சொல்லிக் குதூகலம் அடைந்தார். மற்றவர்களும், “சபாசு” என்றனர்.

நான் பாட்டுக்குப் பொருள் சொன்னேன். செட்டியார், “அந்த ‘வாய்ந்த’என்ற வார்த்தையைக் கண்டு சந்தோசப்பட வேண்டும். இந்த அவசரத்தில் அந்தமாதிரி சொல்லுவதற்கு ஐயா அவர்களிடம் படித்துப் பழகினவர்களுக்குத்தான் தெரியும். தானே வந்து வாய்ந்த புகழைப் படைத்து விளங்குமென்று அருத்தம்” என்று மற்றவர்களைப் பார்த்துச் சொன்னார்.

பொருள் கூறி முடிக்கையில் ‘தியாகராசப் பெயர் கொள் மேன் மையோனே’ என்பதற்கு உரை கூறிவிட்டு, “அந்தப் பெயருக்கு ஏற்றபடி எனக்கு வேலையை அளித்தால்தான் உங்கள் பெயர் நிலைக்கும்; இல்லாவிட்டால் நிலைக்காது” என்றேன்.

“இவ்வளவு விசயங்களையும் பொருத்திச் சீக்கிரத்தில் அமைத்தது ஆச்சரியந்தான். நான் சொன்ன கருத்தை ‘ஏய்ந்த தமிழாய்ந்த முறைக்கு இயைவுற’ என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார்” என்று சீநிவாசையர் சந்தோசமுற்றார்.யாவரும் தங்கள் தங்கள் திருப்தியைத் தெரிவித்துக் கொண்டனர். “சாயங்காலம் கோபாலராவு அவர்களைப் பார்க்கவேண்டும். இங்கேயே தங்கியிருங்கள். நான் வந்து அழைத்துப் போகிறேன்” என்று சொல்லிவிட்டுச் செட்டியார் தம் வீடு சென்றார். மற்றவர்களும் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

அன்று சேசையர் வீட்டிலேயே போசனம் செய்து கொண்டேன். பிற்பகல் ஐந்து மணிக்குச் செட்டியார் என்னைக் கோபாலராவு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். புத்தகக் கட்டுகளும் எங்களுடன் வந்தன. அங்கே சேசையர், அனுமந்த ராவு, சீநிவாசையர் முதலிய ஆசிரியர்களும் வந்தார்கள்.

கோபால ராவு அப்போது மெத்தையில் இருந்தார். எப்போதும் புத்தகங்களுடன் உறவாடும் அப்பெரியார் தனியே இருந்து படித்து இன்புற்றுக்கொண்டே இருப்பவர். அவரை அணுகுவதற்கு யாவரும் அஞ்சுவார்கள்.

நாங்கள் கீழே உள்ள கூடத்தில் இருந்தோம். எல்லாரும் வந்த விசயத்தை எப்படித் தெரிவிப்பது என்று யோசித்திருக்கும்போது அனுமந்தராவு துணிவுடன் மேலே சென்று விசயத்தைத் தெரிவித்து வந்தார். கோபால ராவு வருகையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்தோம். சிறிது நேரத்திற்குப் பின் இவர் மெல்லப் படிகளில் இறங்கி வந்தார். பரிசுத்தமான உடையும், விசாலமான பார்வையும், நெற்றியிலுள்ள திலகமும் அவருடைய கம்பீரமான தோற்றத்துக்கு அங்கங்களாக இருந்தன. தூய்மையே அவர் வடிவம் என்னும்படி இருந்தது அக்காட்சி. அவரைக் கண்டவுடன் அஞ்சலி செய்துவிட்டுச் செட்டியார், “நான் முன்னமே இவ்விடத்தில் விஞ்ஞாபனம் செய்து கொண்டபடி என் தானத்திற்குக் குறிப்பிட்டவரை அழைத்து வந்திருக்கிறேன். இங்கே அவரைப் பரீட்சித்துப் பார்க்கவேண்டும்” என்றார். அப்போது அவர், “நீங்கள் சொல்வதே போதும்; நான் பரீட்சை செய்யவேண்டியது அவசியமில்லை. உங்கள் வாக்கே எனக்குப் பிரமாணம்” என்றார். அப்போது நான் பண்டார சந்நிதிகள் கொடுத்திருந்த கடிதத்தைக் கொடுத்தேன். அதை அவர் படித்துப் பார்த்தார். அப்பால் சேசையர் ஆங்கிலத்தில் அவரோடு பேசத் தொடங்கினார். மடத்தின் பெருமையையும், பிள்ளையவர்கள் பெருமையையும், நான் அங்கே படித்தவனென்பதையும், நான் அங்கே பாடம் சொல்லி வந்ததையும், காலையில் நிகழ்ந்த எல்லாவற்றையும் அவர் விரிவாக எடுத்துச் சொன்னார். கோபாலராவு என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார். அப்போது சீநிவாசையர் என்னைப் பார்த்து, “காலையில் நீங்கள் செய்த பாடலை இங்கே சொல்லிக் காட்டுங்கள்” என்றார். எனக்கு அது ஞாபகமில்லாமையால் எந்த எந்த வார்த்தைகள் இருந்தனவென்று யோசித்தேன். அதைச் சொல்லக் கால் மணிக்கு மேலாயிற்று. சீநிவாசையர், “காலையில் ஐந்து நிமிசத்தில் சொல்லி விட்டீர்களே! இப்போது ஏன் தாமதம் ஆகிறது?” என்றார். “வேறு புதிய செய்யுள் செய்யச் சொன்னால் உடனே சொல்லி விடுவேன். அதே பாடலைச் சொல்லச் சொன்னதால் பதங்களை ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தேன்” என்று சமாதானம் சொன்னேன்.

“செய்யுள் எளிய நடையில் இருக்கிறது. இங்கிலீசில் அப்படி யிருப்பதுதான் உயர்வு என்று சொல்வார்கள்” என்று கோபாலராவு சொன்னார். அப்போது ஆயிரம் பேர்கள் சேர்ந்து என்னைப் பாராட்டியதைப் போன்ற சந்தோசத்தை அடைந்தேன்.

அப்பால் செட்டியார் தாம் கொண்டுவந்த புத்தகங்களைக் காட்டி, “எந்தப் புத்தகத்தையேனும் எடுத்துக் கொடுத்து இவரைப் பரீட்சை செய்யலாம்” என்றார். கோபாலராவு “அவசியமில்லை” என்று சொல்லச் செட்டியார் பின்னும் வற்புறுத்தவே அவர் ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்து என் கையில் அளித்தார். அது கம்ப ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் மந்தரை சூழ்ச்சிப் படலத்தின் ஆரம்பமாக இருந்தது. அப் பகுதியை முதலிலிருந்தே படித்துப் பொருள் சொன்னேன். கேட்ட கோபால ராவு திருப்தியுற்றுச் செட்டியாரைப் பார்த்து, “நீங்கள் சொன்னது சரி. நான் ஆட்சேபிக்க இடமில்லை; நீங்களும் மற்ற ஆசிரியர்களும் ஏகோபித்துச் சொல்லுவதைக் காட்டிலும் வேறு சாட்சி என்ன வேண்டும்? தங்களுடைய கால அட்டவணையை இவரிடம் கொடுத்துவிடுங்கள். வருகிற திங்கட்கிழமை முதல் இவர் கல்லூரியில் வேலை பார்க்கட்டும்” என்று சொன்னார். நேரில் சொன்ன அந்த வார்த்தைகளே எனக்குக் கிடைத்த உத்தரவு. நான் விண்ணப்பமெழுதிப் போடாமலே கிடைத்த உத்தரவு அது. எழுதாக் கிளவியாகிய அது பல வருசங்கள் சென்றும் என் காதில் இன்னும் ஒலிக்கிறது.