(உ.வே.சா.வின் என் சரித்திரம் 122: கல்லூரி நுழைவு – தொடர்ச்சி)
என் சரித்திரம்
இரண்டாவது பாடம்
மணி அடித்தவுடன் நான் முன்னே வேறு வகுப்பிற்குச் சென்றேன். செட்டியார் பிள்ளைகளைத் தனியே அழைத்து, நான் பாடம் சொன்னதைப் பற்றி அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்டார். பிள்ளைகள் தங்களுக்கு மிக்க திருப்தியாக உள்ளது என்று தெரிவித்தார்கள். “நான் மிகவும் கடினப்பட்டு இவரை அழைத்து வந்திருக்கிறேன். இவரிடத்தில் மரியாதையாக இருங்கள். என்னிடம் இருப்பது போலவே இவரிடமும் இருக்க வேண்டும்” என்று செட்டியார் அவர்களை நோக்கிச் சொல்லி விட்டுச் சிலரை இன்னார் இன்னாரென்று எனக்குப் பின்பு தெரிவித்தார்.
அடுத்த மணியில் பி. ஏ. முதல் வகுப்புக்குப் பாடம் சொல்லப் போனேன். செட்டியாரும் வேறு சில ஆசிரியர்களும் உடன் வந்தார்கள். சேசையர் விருப்பத்தின்படி சமற்கிருதப் பண்டிதராகிய பெருகவாழ்ந்தான் இரங்காசாரியரும் வந்தார். அங்கே இராமாயணத்தில் அகலிகைப் படலம் பாடம் சொல்லத் தொடங்கினேன். முதற் பாட்டைச் சகானா இராகத்தில் படித்துவிட்டுப் பொருள் சொல்லலானேன்.
நான் பாடம் சொல்லும் போதெல்லாம் பிள்ளைகள் என்னையே பார்த்துக் கவனித்து வந்தார்கள். செட்டியாரோ அவர்களில் ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்து வந்தார். எல்லோருடைய முகத்திலும் திருப்தியின் அடையாளம் இருந்ததை அவர் உணர்ந்து தாமும் திருப்தியுற்றார். இவ்வாறு இருந்த சமயத்தில் நான் சொன்ன ஒரு விசயத்தை இரங்காசாரியார் எழுந்து ஆட்சேபித்தார். நான் சமாதானம் சொல்லத் தொடங்குகையில் செட்டியார் எழுந்து மிக விரைந்து அவரிடம் சென்று அஞ்சலி செய்து, “சுவாமிகள் இந்த சமயம் ஒன்றும் திருவாய் மலர்ந்தருளக் கூடாது. இவர் பிள்ளைகளுக்குப் பொருள் விளங்கச் சொல்லுகிறாரா என்பதை மட்டும் கவனித்தாற் போதும். ஆட்சேபம் பண்ணக்கூடிய சமயம் அல்ல இது.இவரோ சிறு பிள்ளை. நீங்களோ பிராயம் முதிர்ந்தவர்கள். சமற்கிருதப் பாரங்கதர். ஏதேனும் தவறிவிட்டால் என்னுடைய விருப்பம் பூர்த்தியாகாது. சமித்தருளவேண்டும்” என்று சொல்லி மீண்டும் தம் இடத்தில் போய் அமர்ந்தார். மற்ற இடங்களில் செட்டியார் தைரியமாகப் பேசிப் பிறரை அடக்குவதைக் கண்டிருந்த நான் அப்போது கல்லூரியிலும் அப்படிச் செய்வதில்அவர் பின் வாங்கார் என்பதை உணர்ந்தேன்.
மேலே பாடம் நடந்தது. “வைகுந்தத்திற்குச் சென்ற வித்தியாதரப் பெண்மணி ஒருத்தி திருமகளைத் தோத்திரம் செய்து பாட அத்தேவி மகிழ்ந்து ஒரு மாலையைக் கொடுக்க அதனை வாங்கி அந்தப் பெண்மணி தன் யாழிற்குச் சூட்டினாள்” என்ற செய்தி அகலிகைப் படலத்தில் வருகிறது. “அன்ன மாலையை யாழிடைப் பிணித்து” என்று ஒரு பாடல் தொடங்குகிறது. அதற்கு நான் பொருள் சொல்லும்போது இடையே செட்டியார், “இந்தக் காலத்துப் பிள்ளைகளானால் பக்கத்திலுள்ள தங்கள் நாயின் கழுத்தில் அதை மாட்டுவார்கள்” என்றார். யாவரும் கொல்லென்று சிரித்தனர்.
பிற்பகல் நிகழ்ச்சிகள்
அந்த மணி முடிந்தது. இடை நேரத்திலே ஆகாரம் செய்து விட்டு வந்தேன். பிற்பகலில், எப். ஏ. முதல் வகுப்புக்குச் சென்றோம். அங்கே 80 பிள்ளைகளுக்கு மேல் இருந்தார்கள். நன்னூல் எழுத்தியல் ஆரம்பமாயிற்று. முதல் சூத்திரத்தை நான் சொல்லிவிட்டு, “மேலே சில சூத்திரங்களை நீங்களே சொல்லி அந்த முறையை எனக்குக் கற்பிக்க வேண்டும்” என்று செட்டியாரை வேண்டிக் கொண்டேன். அவர் அப்படியே சொல்லிக் கேள்விகளும் கேட்டார். எனக்குப் பல விசயங்கள் அப்போது தெரிந்தன. பிறகு, பி..ஏ. இரண்டாவது வகுப்புக்குச் சென்றோம். அந்த வகுப்பில் இருந்தவர்கள் செட்டியாரிடம் மூன்று வருசங்கள் பாடம் கேட்டவர்கள். அந்த வருசம் பரீட்சைக்குப் போக வேண்டியவர்கள். புதுக்கோட்டையில் முதல்வராக இருந்த எசு.இராதா கிருட்டிணையர். கோயம்புத்தூரில் சிறந்த வழக்குரைஞராக விளங்கிய பால கிருட்டிணையர், திருநெல்வேலி இந்து கல்லூரியில் ஆசிரியராக இருந்த சீதாராமையர் முதலிய பன்னிரண்டு பேர்கள் அவ்வகுப்பில் இருந்தார்கள்.
கம்ப இராமாயணத்தில் நாட்டுப் படலம் பாடமாக இருந்தது. “வாங்கரும்
பாத நான்கும் வகுத்தவான் மீகியென்பான்” என்ற பாடலைச் சொல்லிப்
பொருள் கூறிவிட்டு இலக்கணக் கேள்விகள் கேட்கலானேன்.
ஒரு மாணாக்கரை, “வாங்கரும் பாதமென்பதிலுள்ள அரும்பாதம் என்பது என்ன சந்தி?” என்று கேட்டேன். அவர், “பெயரெச்சம்” என்றார். பண்புத் தொகையாகிய அதைப் பெயரெச்சமென்று பிழையாகச் சொல்லவே, அங்கிருந்த செட்டியார் உடனே தலையில் அடித்துக்கொண்டு, “என்ன சொல்லிக் கொடுத்தாலும் சில பேருக்கு வருகிறதில்லை. மூன்று வருசம் என்னிடம் பாடம் கேட்டவன் இப்படிச்சொன்னால் எனக்கல்லவா அவமானம்?” என்று அந்த மாணாக்கரை நோக்கிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து,“தள்ளாத வயசில் நான் எவ்வளவு சொல்ல வேண்டுமோ அவ்வளவு சொல்லாமல் இருந்திருப்பேன். அதனால் தான் வேலையை விட்டு நீங்குகிறேன். நீங்கள் நன்றாகச் சொல்லிக் கொடுங்கள்” என்றார்.
மேலே நான் பாடம் சொன்னேன். மணி அடித்தது. உடனே நாங்கள் கல்லூரியை விட்டுப் புறப்பட்டோம்.
முதல் நாளாகிய அன்றே எனக்கு, ‘நம் வேலையை நன்றாகச் செய்யலாம்’ என்ற தைரியம் பிறந்தது. பிள்ளைகளுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கும், எல்லாருக்கும் மேலாகத் தியாகராச செட்டியாருக்கும் நான் அந்தப் பதவிக்கு ஏற்றவனென்ற திருப்தி உண்டாயிற்று.
(தொடரும்)
உ.வே.சா., என் சரித்திரம்
No comments:
Post a Comment