தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4
பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரின்
சுவடுகளைப் பற்றிக் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தின்’ மூன்றாவது
தலைமுறையில் முத்திரைப் பதித்த கவிஞர்தான் தமிழொளி. பாரதியையும்,
பாரதிதாசனையும் பலரும் பின்பற்றி அவர்களது சுவடுகளில் கால்பதித்து
நடந்தாலும் அவர்களின் வழிநின்று பொதுவுடைமைக்குக் குரல் கொடுத்து இறுதிவரை பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் தமிழொளி.
தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள
குறிஞ்சிப்பாடியை அடுத்த ‘ஆடூரில்’ சின்னையா – செங்கேணி அம்மாள் இவர்களின்
தலைமகனாக 1924-ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் 21-ஆம் நாள் கவிஞர் தமிழொளி’
பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் விசயரங்கம் என்பதாகும். அவரை
வீட்டில் அன்பாகப் ‘பட்டுராசு’ என்று அழைத்தனர். ஆனால் அவர் தனக்குப்
பெற்றோர் இட்ட பெயரை விடுத்து பாரதிதாசனின் கவிதை ஒன்றிலிருந்தே எடுத்த
‘தமிழ் ஒளி’ என்ற பெயரைத் தனக்குப் புனைபெயராகச் சூட்டிக் கொண்டார். இதுவே
இறுதி வரை நிலைத்து நின்றது எனலாம்.
பாவேந்தர் பாரதிதாசன் பணியாற்றிய புதுவை
முத்தியாலு பேட்டையில் உள்ள கல்வே கல்லூரியில் கவிஞர் தமிழ்ஒளி தமது
தொடக்கக் காலக் கல்வியைத் தொடங்கினார். தமிழ்ஒளி பாரதிதாசனைத் தனது வகுப்பு
ஆசிரியராக மட்டுமின்றி வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆசிரியராகவும் கொண்டார்.
அக்கல்லூரியில் தமிழ்ஒளி புகுமுக வகுப்பு படித்துத் தேறினார்.
போராட்ட வீரர்களின்
புகலிடமாகவும்-புரட்சிச் சிந்தனைகளின் பிறப்பிடமாகவும் விளங்கிய புதுவை
மண்தான் தமிழ் ஒளிக்குப் புதிய கனவுகளும், கருத்துகளும் உருவாவதற்குக்
களமாக-உரமாக அமைந்தது. ஒரு தன்மதிப்பு(சுயமரியாதை)த் தோழர் மரணம்
அடைந்தபோது கவிஞர் எழுதிய இரங்கற் பாடல் அனைவரது பாராட்டையும் பெற்றது.
அந்தப் பாடல் இளமைக்காலந்தொட்டே தமிழ்ஒளிக்கு சமூக அக்கறையும் உண்டு
என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்த்து.
தமிழ்ஒளி பள்ளிச்சிறுவனாக இருந்த
காலத்தில் புதுவையில் இருந்த பிரஞ்சு ஆளுநர் ‘போன் வேன்'(Bon van) என்பவன்
மக்களிடம் கொடூரமாக நடந்துகொண்டான். விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில்
புதுவை அரசியலில் தீவிரமாக இருந்த தோழர் வி.சுப்பையாவை ஆளுநர் போன்வேன்
புதுவையை விட்டு வெளியேற்றி நாடு கடத்தினார்.
ஆளுநரின் கொடுங்கோன்மையை எதிர்த்து
மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அவனுடைய குடும்பத்தாரும் ஆணவத்துடன்
நடந்து கொண்டனர். போன்வேனின் மகளும் ஆணவத்துடன் அனைவரிடமும் நடந்து
கொண்டாள்.
இதனைக் கண்ட இளைஞர்கள் இதனை எவ்வாறேனும்
அடக்க வேண்டும் என்று எண்ணினர். ஒருநாள், புதுவை மணக்குள விநாயகர் கோயில்
அருகே தமிழ்ஒளி செல்லும்போது போன்வேன் மகளின் அதிகாரம் நிறைந்த ஆணவத்தைக்
கண்டு, சினமுற்று அவளைப்பற்றி “துண்டறிக்கை” எழுதிப் புதுவை நகர் முழுதும்
வழங்கிவிட்டார். இதனைக் கண்டு கோபமுற்ற ஆளுநர் போன்வேன் தமிழ்ஒளியைச் சிறையில் அடைத்தான்.
இரண்டு வாரங்கள் சிறைவாசத்தைத் துய்த்த கவிஞர் மாணவராக இருந்ததால்
மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
பாண்டிச்சேரியில் தமிழ்ஒளியால் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அவரைப் பாரதிதாசன் பெருமுயற்சிசெய்து தஞ்சை மாவட்டம் கரந்தைத் தமிழ்க் கல்லூரிக்குப்
பயில அனுப்பினார். தமிழ்ழொளி கரந்தையில் படித்துக் கொண்டிருந்த போதுதான்
“சிற்பியின் கனவு” என்னும் நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் சக்தி நாடக சபாவினரால் அரங்கேற்றப்பட்டது. பின்னாளில் இது ‘வணங்காமுடி’ என்னும் பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. ஆனால் திரையில் மூலக்கதை: தமிழ்ஒளி என்று குறிப்பிடப்படாமலேயே அவரது பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கரந்தையில் கவிஞர் படித்துக் கொண்டிருந்த
காலத்தில் தமிழுக்கு முதலிடம் இருந்ததைவிட, சாதிக்கே முதலிடம் இருந்தது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தமிழ் ஒளிக்கு இந்நிலை பெரும்பாதிப்பை
ஏற்படுத்தியதால் அவரால் கரந்தையில் தொடர்ந்து படிக்க முடியாத சூழல்
ஏற்பட்டது. எனவே, தமிழொளி மீண்டும் புதுவைக்குத் திரும்பினார். தமிழ்
ஒளிக்குப் புதுவையில் பாரதிதாசனின் இல்லமே புகலிடம் அளித்தது. பாரதிதாசனின் இல்லத்தில் கவிஞர் தங்கியிருந்தபோது, பாரதிதாசனின் மகன் கோபதி, தமிழ் ஒளிக்கு உற்ற தோழனாக இருந்தார்.
1944-ஆம் ஆண்டில் கோபதி ‘முரசு’ என்னும்
பெயரில் கையெழுத்துப்படி ஒன்றை நடத்தி வந்தார். அந்தக் காலத்தில் தமிழில்
கைப்படி நடத்தக்கூடாது என்று புதுவை அரசு சட்டம் போட்டிருந்தது. அதனால்
கோபதி பாரதிதாசனின் முன்னிலையிலேயே கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு ஆறு
மாதம் நடந்தபோதிலும், அடுத்த இதழைக் கொண்டு வருவதற்காக கோபதி தமது பெயரை, ‘மன்னர் மன்னன்’ என்று மாற்றிக்கொண்டு முரசு இதழை வெளியிட்டார். அந்தச் சமயத்தில் தமிழ்ஒளி முரசு இதழுக்கு வலக்கரமாக இருந்து செயல்பட்டார்.
தமிழொளி பாவேந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலத்தில் பாரதிக்கு ‘குயில்பாட்டு’
கருக்கொண்ட இடமாகிய புதுவைக் குயில்தோப்பிற்கு அடிக்கடி சென்று வருவது
வழக்கம். அங்கே நிலவிய நிழலின் குளுமையும், குயில்களின் இன்னோசையும்
கவிஞரது இதயத்தை ஈர்த்தன. அதனால் கவிஞர் தமிழொளி பற்பல கவிதைகளை எழுதினார்.
தமிழ் ஒளி தமது இருபது வயது வரை புதுவையில் வாழ்ந்தார். குறிப்பாகப்
பாரதிதாசன் இல்லத்தில் இருந்தார் என்பது நோக்கத்தக்கது. அப்போது கவிஞர்
தமது படைப்புகளை ஆசான் பார்வையில் வைத்து பாராட்டுப் பெற்றார்.
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
மின்வரி: Malar.sethu@gmail.com
No comments:
Post a Comment