தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34

கையறு நிலைக் கவிதைகள்
  கையறு நிலை என்பது புறப்பொருள் பாடல்களில் அமைந்துள்ள ஒரு துறையாகும். அரசன் இறப்ப அவனைச் சார்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் என்பது பொருளாம்.
 ‘செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
 கையற வுரைத்துக் கைசேர்ந் தன்று’ 90
இறந்தனுடைய புகழை எடுத்துக்கூறி இரங்கினும் கையறுநிலை என்னு ம்  துறையாம்.
கழிந்தோன் தன்புகழ் காதலித் துரைப்பினும்
 மொழிந்தனர் புலவர் அத்துறை என்ன’ 91
என்று புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் கூறுவர். இதனை,
 ‘கழிந்தோர் தேஎத் தழிபடர் உறிஇ
  ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலை’ 92
என்று தொல்காப்பியரும் கூறியுள்ளார்.
  கவிஞர், கையறுநிலை என்னும் துறையில் ஆறு கவிதைகள் பாடியுள்ளார். இந்திய நாட்டின் முன்னாள் தலைமையச்சர் நேரு மறைவு குறித்து இரண்டு கவிதைகளும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணா மறைவு குறித்து இரு கவிதைகளும், தஞ்சை நாட்டாண்மைக் கழகத் தலைவராயிருந்த உமாமகேசுவரம்பிள்ளை மறைவு குறித்து ஒரு கவிதையும், பசுமலை நாவலர் சோம சுந்தர பாரதியார் மறைவு குறித்து ஒரு கவிதையும் என ஆறு கவிதைகள் பாடியுள்ளார்.
தலைமை அமைச்சர் நேரு
இந்திய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டவர் நேரு. உலக நாடுகள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று உழைத்தவர் சவகர்லால் நேரு. உலகத்தின் சிறந்த தலைவர்களுள் ஒருவராக மதிக்கப்பட்டார். இந்திய நாட்டின் வறுமையை ஒழிக்கத் திட்டங்கள் பல நிறைவேற்றினார். இவர் மறைவு குறித்துக் கவிஞர் நாற்பத்தொரு அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பா ஒன்றும், இருபத்தைந்து அடிகளைக் கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பா ஒன்றும் பாடியுள்ளார்.
  செல்வச் சிறப்பு மிகுந்த மோதிலால் நேரு அவர்களின் மகனாய்த் தோன்றினார். மேலைநாடு சென்று உயர்கல்வி பெற்றார். இந்திய நாட்டின் விடுதலையில் வேட்கை கொண்ட காரணத்தால் மகாத்மா காந்தியடிகளின் நெறியைப் பின்பற்றி ஆங்கிலர் ஆட்சியை அகற்றப்பாடுபட்டார். இன்னல் வாழ்வை மனமுவந்து ஏற்றார்.
“இன்னாமை இன்பம் எனக் கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு” 93 என்ற தமிழ்
மறையின் மொழிக்கேற்ப பகைவரும் மதிக்கத் தக்க தலைவராய் விளங்கினார். நாட்டு மக்களின் பசியையும் போக்க திட்டம் பல வகுத்தார். அறிவியல் நெறியே சிறந்தது என எண்ணினார். மூடக் கொள்கையை வெறுத்தார். இந்தியா தொழில் வளர்ச்சியிலும் அறிவியல் நெறியிலும் ஏற்றம் பெற ஓயாது உழைத்தார்.
 ரோசா நிறங்கொண்ட நேரு,
 ‘இன்றைய சிறுவரே நாளைய தலைவர்’
எனக் கருதி குழந்தைகள் மீது காதல் கொண்டார். உலக நாடுகள் பலவும் சுற்றிப் பார்த்தார். சொல்வன்மை படைத்த அரசியல் அறிஞராய் விளங்கினார். கலைகள் போற்றும் காவலராய், உள்ளத் தூய்மையராய் விளங்கினார். நேரு பெருமான் மறைந்ததை,
ஆசிய சோதியாய் ஆட்சி புரிந்த
 தலைமை அமைச்சர் சவகர்லால் நேரு
 பிரிந்தனர் அந்தோ! பேதுற் றனமே!
 விளக்கினை இழந்த வீட்டவர் ஆனோம்
 அளப்பருந் துயர்க்கடல் ஆழ்ந்துவிட்டோமே!’ 94
என்று அரற்றுகிறார்.
அண்ணாதுரை
  தமிழ்நாட்டின் முதலமைச்சராக 1967 மார்ச்சு மாதம் ஆறாம் நாள் பொறுப்பேற்ற அண்ணா அவர்கள் மிகக் குறைந்த காலமே ஆட்சி நடத்தினார். 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் நாள் நோயினால் மறைந்தார். அவர் மறைவு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அண்ணா மறைவு குறித்து, ‘குறள் நெறி’ இதழில் ‘கருதுவோம் என்றுமே’95 என்னும் தலைப்பில் கவிதை படைத்துள்ளார் இலக்குவனார். இக்கவிதை இருபத்து மூன்று அடிகளயுடைய நேரிசை ஆசிரியப்பாவாகும்.
அண்ணா நெடுந்துயில் கொடுத்துவிட்டார். புலவர்களே, நமக்குச் சொல்ல முடியாத துன்பத்தை அளித்த எமனைக் கொல்ல வாரீர். மருத்துவர் பலரை வறிதே நிறுத்திவிட்டு, அண்ணாவின் புன்னகையை விரும்பியோ, அவருடைய நாவன்மையை விரும்பியோ, தமிழ்நூல் படைக்கும் மெல்லிய கையைப் பற்றியோ எமன் இழுத்துச் சென்றுவிட்டான். இனி என் செய்வோம்.
 ‘சிறியரும் பெரியரும் சேர்ந்தும் தனித்தும்
 அழலும் தொழலும் அரற்றலும் அலைதலும்
 முட்டலும் மோதலும் முடிவிலை அந்தோ!
 தமிழ்த்தாய் தலைமகனை இழந்து நைந்தாள்
 தமிழரின் கலங்கரை விளக்கம் தரையில்
 உடைந்து வீழ்ந்தது!96
என்று அழுது புலம்புகிறார் கவிஞர்.
கூற்றின் கொடுமை சொல்லும் தரத்ததோ? இரங்கல் அன்றி என் செயல இயலும். அண்ணாவே, அரும்பெறல் மணியே உனை என்றும் கருதுவோம் என்று கூறி முடிக்கிறார் கவிஞர்.
வள்ளல் அதியமான் இறந்தபோது ஒளவையார் பாடும் கையறுநிலைப் பாடல் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
 பெரியகட் பெறினே
 யாம்பாடத் தான் மகிழ்ந் துண்ணும் மன்னே 97
அண்ணா அவர்கள் மறைவு குறித்து, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ‘தமிழ்ப் பேரொளி’ என்னும் தலைப்பில் நூல் ஒன்று வெளியி ட்டுள்ளது. இதில்,
‘இன்றிமிழ்த் தாயின் இடுக்கணோ பெரிதே’98
என்னும் பொருளில் இலக்குவனார் கவிதை எழுதியுள்ளார். இது முப் பத்திரண்டு அடிகளையுடைய நிலைமண்டில ஆசிரியப்பா.
 தமிழ் அன்னையின் புகழைக் காக்கத் தோன்றிய தலைமகன் அண்ணா அனைவரும் போற்றும்படி இருபத்து மூன்று திங்களே ஆட்சி செய்தார். மாற்றுக் கட்சியினரும் அண்ணாவின் திறமையைப் பாராட்டினார்கள். இவ்வளவு சிறப்புடைய அண்ணா விரைவிலேயே கடற்கரையில் பள்ளி கொண்டு விட்டார்.
ஏழை மக்கள் கதறினார். செல்வர் சேர்ந்து புலம்பினார்கள். ஆண்களும் பெண்களும் அழுதார்கள். அண்ணா அண்ணா எனும் ஒலி விண்ணினை முட்டியது.
கம்பர் கல்லாய் நின்று துயருற்றார். பல்கலைக்கழகம் செயலற்றுப் போனது என்கிறார். மேலும்,
வள்ளுவர் நெறியில் வாழ்ந்தார். உலகம் போற்றும் வண்டமிழ் வாழ்ந்திட இருமொழித்திட்டம் வகுத்தார். இந்திமொழியைத் தடுத்தார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’99 என்னும் தமிழ்மறை போற்றி தன்மதிப்புமணச்சட்டம் இயற்றினார். சொந்த நாட்டின் பெயரை, ‘செந்தமிழ் நாடு’ என்று சொல்ல வைத்தார். இன்னும் எண்ணிலாத பணிகள் செய்ய இருந்தாரே. ஐயகோ என்று அலமருகிறார் கவிஞர்.
 ஐயகோ இன்னும் அளப்பரும் பணிகள்
 செய்ய இருந்த சீர்மிகு செம்மலைக்
 கொடிய கூற்றம் கொண்டு சென்றதே
 …………………………………….
 …………………………………….
 இன்றமிழ்த் தாயின் இடுக்கணோ பெரிதே’100
குறிப்புகள்:
  1. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, ‘பொதுவியர் படலம்’, கொளு: 267.
  2. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, ‘பொதுவியற் படலம்’, கொளு:268.
  3. தொல்காப்பியர், தொல்காப்பியம், ‘புறந்திணையியல்’ நூற்பா. 79.
  4. திருவள்ளுவர், திருக்குறள் இடுக்கண் அழியாமை, குறள். 630.
  5. சி. இலக்குவனார், உலகப் பேரொளி, கழக வெளியீடு சென்னை 1964, பக்-341-342. அ-ள் 33-37.
  6. சி. இலக்குவனார், ‘இரங்கல் மலர்’ ‘கருதுவோம்என்றுமே’ குறள்நெறி, 1-3-69, ப-3.
  7. சி. இலக்குவனார், ‘கருதுவோம் என்றுமே’
            அ-ள் 11-16.
  1. ஒளவையார், புறநானூறு பா.எ. 235 அ-ள். 1-3.
  2. சி. இலக்குவனார், தமிழ்ப்பேரொளி, ‘இன்றமிழ்த் தாயின் இடுக்கணோ பெரிதே’ கழக வெளியீடு 1970, பக். 218-219.
  3. திருவள்ளுவர், திருக்குறள் ‘பெருமை’ குறள். 972.
  4. சி. இலக்குவனார், தமழ்ப் பேரெளி, ‘இன்றமிழ்த்தாயின் இடுக் கணோ பெரிதே’ அ-ள் 27-32.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran