இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33:
புதுக்கோட்டை மருத்துவர் இராமச்சந்திரன்
அவர்கட்குப் படைக்கப்பட்ட ‘அன்புப் படையல்’ என்னும் கவிதை 1962 ஆம்
ஆண்டில் இயற்றப்பட்டது. பத்தொன்பது அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப்
பாவால் ஆகியது. கவிஞர் எழுதிய ‘பழந்தமிழ்’86 என்னும் மொழியாராய்ச்சி நூலை மருத்துவருக்குப் படைத்துள்ளார்.
மருத்துவர் வி.கே. இராமச்சந்திரன்
யாவரிடமும் இன்முகம் கொண்டு இனிய சொல் பேசுபவர். தாய் போன்ற அன்புள்ளம்
கொண்டவர். வாழ்வுக்கு இடையூறாய் அமையும் நோயின் முதல் காரணத்தை அறிந்து,
அதனை நீக்கும் வழியை ஆராய்ந்து செய்யும் மருத்துவ அறிஞர். ஊதியத்தைப்
பெரிதாக நோக்காது மாந்தர்க்கு வந்துள்ள நோயை நீக்கும் நல்லவர். பிறர்க்கென
வாழ்பவர். அண்ணலாரின் அன்புறு தோன்றல் (வளர்ப்பு மகன்). புலவர் நலனைக்
காக்கும் பெரியார். எளிய வாழ்வினர். யாவரிடத்தும் நட்பாய் இருப்பார்.
நோயாளிடம் அன்புடன் பழகி அறிவுரை கூறி நோய் போக்கும் பண்புடையவர். அவர்க்கு
இந்நூலைப் (பழந்தமிழ்) படையல் ஆக்கினேன்’ என்கிறார் கவிஞர்.
அன்பால் பிணித்து ஆய்வுரை நல்கி
வன்பிணி போக்கி வாழச் செய்யும்
பணிமிக ஆற்றும் பண்பினைப் போற்றி
அணிமிகு படையலாய் ஆக்கினேன் இதனையே.87
நாகர்கோவில் அன்பர் சுப்பிரமணியனார் ஒரு
வள்ளல். ஆறுமுகா தங்க மாளிகையின் உரிமையாளர். கவிஞர் அவர்கள் எழுதிய ‘என்
வாழ்க்கைப் போர்’ என்னும் தன் வரலாற்று நூல் வெளிவரத் துணை செய்தவர். இவர்
மீது தமக்குள்ள நன்றியைப் புலப்படுத்தும் வண்ணம் கவிஞர் ‘நன்றிப் படையல்’88 என்னும் கவிதையை ஆக்கினார். பதினான்கு அடிகளையுடையது. நேரிசை ஆசிரியப்பாவால் இயன்றது. 1971ஆம் ஆண்டில் படைக்கப்பட்டது.
‘வள்ளல் சுப்பிரமணி அனைவர்க்கும் உதவும்
நல்ல உள்ளம் கொண்டவர். அன்பே உருவானவர். பண்புள்ள நண்பர். பல வளங்கள்
நிறைந்தவர். அரிமா மன்றத்தின் காப்பாளர்.நகை, ஈகை, இன்சொல், இகழாமை என்ற
நான்கு குணங்களையும் ஒருங்கே பெற்றவர். புலவர்க்கு நண்பராவர். புன்னகை
கொண்டு பொன்நகை வணிகம் செய்பவர். பொன்றாப் புகழுடைய அவர் பல்லாண்டு வாழ்க’
என வாழ்த்துகிறார்.
செய்ந்நன்றி போற்றுதல் என்பது தமிழர்
பண்பாடு. ஒருவர் தமக்குச் செய்த நன்றியை மறக்கலாகாது. கவிஞர்
தமக்குதவியவர்களைப் போற்றிப் பாராட்டியுள்ளார்.
‘எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு’89
குறிப்புகள்:
- &87. சி. இலக்குவனார், பழந்தமிழ்,
நான்காம் பதிப்பு, வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை,
1980.
88.சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர் ‘நன்றிப் படையல்’ குறள் நெறி
வெளியீடு, மதுரை 1971, ப-5.
89. திருவள்ளுவர், திருக்குறள் செய்த நன்றியறிதல், செ.எ.110.
No comments:
Post a Comment