Monday, September 05, 2016

பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-இலக்குவனார் வழியில் செந்தமிழ்நடை-இல.திருவள்ளுவன் ;thalaippu_ilakkuvanarvazhiyil_senthamizhnadai_ila.thiruvalluvan

[1]


பேரா.சி.இலக்குவனார்  வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்!

  தமிழ்க்கென மலர்ந்து தமிழ்க்கென வாழ்ந்து தமிழ்த்தாய் உருவமாகப் பார்க்கப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நினைவு நாள், ஆவணி 18 / செட்டம்பர் 03. இந்நாளில் அவரை நினைவுகூர்ந்து தமிழ்க்கடமை ஆற்றுவது நம் கடனாகும்.
  பேரா.சி.இலக்குவனார் தம் தாத்தா முத்து வழியில் பள்ளியில் படிக்கும்பொழுதே கவித்திறனுடையவராக இருந்து ஆசிரியர்களாலும் உடன் பயிலும் தோழர்களாலும் பாராட்டப்பெற்றவர். அவரது தமிழ்ப்பற்றைத் தனித்தமிழ்ப்பற்றாக ஆற்றுப்படுத்தியவர் அவரது ஆசிரியர்  அறிஞர் சாமி.சிதம்பரனார். இலக்குவனார்க்குப் பெற்றோர் இட்ட பெயர் இலட்சுமணன் என்பதுதான். ஆனால், அறிஞர் சாமி சிதம்பரனார், கம்பர் வழியில் அவர் பெயரை இலக்குவன் எனக் குறிப்பிட்டார்.(இலக்குவன் என்னும் பெயரே இலக்குவனார் ஆனது). ஆசிரியர் இட்ட சிறு வித்து, பூத்துக் கனிந்து தமிழ்உலகிற்குப்பெரும்பயனாய் அமைந்தது.
  பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்  மூட்டிய தனித்தமிழ்ப்பொறி  அவரிடம் தமிழ்ப்பகைக்கு எதிரான பெரு நெருப்பை வளர்த்தது. அந்தப் பெருநெருப்பு வளையமே பல நேரங்களில் தமிழ்த்தாயை இன்னலில் இருந்து காப்பாற்றியது.
  பள்ளிப்படிப்பிலேயே பாடத்திற்கு அப்பாற்பட்டுப் பல நூல்களையும் படித்தார். திருக்குறளை முழுமையாகக் கற்றதுபோல் பிற இலக்கியங்களைப் படித்தார். கல்லூரிப்பருவத்தில் எண்ணற்ற  மொழியியல், திறனாய்வு, இலக்கியம் தொடர்பான ஆங்கில நூல்களையும் படித்தார். படிக்கப் படிக்கத் தமிழின்  சிறப்பை உணர்ந்து அதனைப் பரப்பும் பணியைத் தம் கடமையாக ஏற்றார். விடுமுறைக் காலங்களில் ஊர்ப்பொதுவிடத்தில் தனித்தமிழில் தமிழின் சிறப்புபற்றி உரையாற்றினார். சிறுவன் பேசுகிறானே, கேட்போம் என வந்த ஊர்ப்பெரியவர்கள் பேச்சால் ஈர்க்கப்பட்டு ஊக்கப்படுத்தியது, தனித்தமிழ்ப்பாதையில் அவரை நடைபோடச் செய்தது.
  கல்லூரிப்பருவத்தில் இது  விரிந்து பெருகியது.  இதழ்களில் இவரது தனித்தமிழ்க் கட்டுரைகள் இடம்பெற்றன. மாணாக்கர்களின் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தம் அன்பு நண்பர்கள், அ.கிருட்டிணமூர்த்தி, அன்புகணபதி,  முருக இலக்குவன், ஆகிய மூவரையும் இணைத்துக் கொண்டு,  தூயதமிழ்ப்பரப்புரை மேற்கொண்டார். (பழைய)தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இவர்கள் ஊர் ஊராகச் சென்று தூய தமிழ்ப்பரப்புரை மேற்கொண்டனர். மாணவப்பருவத்திலேயே எழிலரசி அல்லது காதலின் வெற்றி என்னும் தனித்தமிழ்ப் பாவியம் படைத்துச் சிறப்பு பெற்றார். மாணவப்பருவத்திலான  தூயதமிழ்ப்பரப்புரைப்பணி, ஆசிரியப்பணி தொடங்கியதும் நாடு முழுவதும் விரிந்ததுஎண்ணற்ற தனித்தமிழார்வலர்களைப் பெருக்கியது; தனித்தமிழ்ப் படைப்பாளர்களை உருவாக்கியது.
  மாணாக்கராக இருக்கும்பொழுது அல்லது ஒரு பருவத்தில் எழுச்சியாக உள்ள பலரும் பின்னர் அடங்கிவிடுவர். ஆனால்,  இலக்குவனாரோ தூய தமிழ்நடைக்கும் தமிழ்க்காப்பிற்குமான தம் பணியைத் தம் வாழ்நாள் இறுதிவரை, பல்வேறு இன்னல்களும் இடையூறுகளும் ஏற்பட்டும், நிறுத்தாமல் செயல்பட்டார். அதனால்தானே தமிழ்ப்போராளியாகப் போற்றப்படுகிறார்.
  பேரா.இலக்குவனார் தாம் பணியாற்றிய கல்விநிலையங்களில் மாணாக்கர்களுக்குத் தனித்தமிழ்ப்பற்றை ஊட்டினார். மாணாக்கர்கள் தனித்தமிழில் பேசுவதுடன், பிறர் பிறமொழிச்சொற்கள் கலந்து பேசினால் எதிர்ப்பும் தெரிவித்தனர். சான்றாக, ஒரு முறை  பேரா.சி.இலக்குவனார், ம.தி.தா.இந்துக்கல்லூரிக்கு நிகழ்ச்சி ஒன்றிற்காகச் சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை)யை அழைத்திருந்தார். அவர் பேசும் பொழுது அயற்சொல் வந்தது. உடன்மாணாக்கர்கள்  கேலிக்குரல் எழுப்பினர். அதற்கு அவர் ”உங்கள் உணர்வைப் புரிந்து  கொண்டேன். என்னாலும் தனித்தமிழில் பேச இயலும். இனி அவ்வாறு பேசுகிறேன்” எனக்கூறித் தனித்தமிழ்நடைக்கு மாறினார். அது மட்டுமல்ல! பேராசிரியர் இருக்குமிடமெல்லாம்,  “உள்ளேன் ஐயா” என வருகைப்பதிவில் தொடங்கி எல்லா நேரங்களிலும் “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்று மாறியது. ஆகவே, தமிழ்ப்பற்று விளையாட்டுத்துறையையும் விட்டு வைக்கவில்லை. விளையாட்டு வகுப்பில் மாணாக்கர்கள் “லவ் ஆல்” என்பதை  விடுத்து “அன்பே கடவுள்” என்றனர். விளையாட்டுத்துறை ஆசிரியர்  “உங்கள் தமிழைத் தமிழ் வகுப்புகளில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியும் பேரா.இலக்குவனாரால் தமிழின்பால் ஈர்க்கப்பட்ட மாணாக்கர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை.  இதனால்தான்  “இலக்குவனார் பணியாற்றும் இடங்களில் உள்ள படிக்கட்டும் பைந்தமிழ்  பாடும்” என்று அனைவரும் கூறுவர்.
  தாம் பணியாற்றிய ஊர்கள் தோறும் தமிழ்க்கழகங்கள் அமைத்துப் பொதுமக்களிடையேயும் தனித்தமிழ்ப்பற்றை விதைத்தார். தனித்தமிழ் இயக்கத்தின் எழுச்சியால் நிகழ்ந்த,  திராவிட இயக்கத்தின் தனித்தமிழ்ப்பெயர் சூட்டிக்கொள்ளும் நற்பணி பேராசிரியர் தொண்டால் எங்கும் பரவியது. ஆசிரியர்களாகப் பணியாற்றிய இவரின் உறவினர்கள், மாணவர்கள் பள்ளிச் சேர்க்கையின்பொழுது பயில வருவோருக்கு நல்ல தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பேரா.இலக்குவனார் பிறந்த ஊரான வாய்மேட்டிலுள்ள இலக்குவனார் நடுநிலைப்பள்ளியின் தலைமைஆசிரியராகவும் தாளாளராகவும் திகழ்ந்த வெற்றியழகன்-தவமணி இணையர் இதில் முதலிடத்தில் இருந்தனர். இன்றைக்கு ஆரியப்பெயர்களைச் சூட்டுவதையே பெற்றோர்கள் பேரின்பமாகக் கருதும் அவலம் வந்துவிட்டது. பிறப்புப்பதிவின்பொழுதே  பெயர் குறிப்பிட வேண்டியுள்ளதால் அயற்பெயர்களே பதிவுகளில் இடம் பெறுகின்றன. இந்நிலையை மாற்றுவதே பேரா.இலக்குவனார்க்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும் என நாம் எண்ணிச்செயல்படவேண்டும்.
  நானிலத்தில் நற்றமிழ் பரவவேண்டும், நிலைக்க வேண்டும் என அரும்பாடுபட்ட இலக்குவனாரின் நினைவுநாளில் அவரது படைப்பு வரிகள் சிலவற்றையாவது படிப்பது நம்மையும் நற்றமிழ்நடையின்பால் ஈர்க்கும்.
  ஒருவர் கருத்தை வெளிப்படுத்தும் பாங்கினைத்தான் நடை என்கிறோம். ஒருவரின் நடை உரைநடையிலும் செய்யுளிலும் மாறுபட்டதாக அமையும். பேரா.சி.இலக்குவனாரின் சில நடைப்பாங்கு மட்டும் இங்கே  குறிப்பிடப்படும். ஒவ்வொருவர் நடையும் ஒவ்வொரு வகையில் சிறப்பாகவே அமையும். எனவே, ஒப்பிட்டுக்கூறவில்லை. ஒப்பிட்டுக் கூறும்பொழுது சில வேளைகளில் ஒருவரின் நடையை உயர்த்தியும் மற்றவர் நடையைத் தாழ்த்தியும் கூறுவதுபோல் தோற்றமளிக்கலாம். எனவே அறிஞர்களின் நடையாராய்ச்சி இங்கே வேண்டற்பாலது.
  பேரா.இலக்குவனார் மாணவப்பருவத்திலிருந்தே எழுதியும் பேசியும் வந்துள்ளார். ஆனால் தொடக்கம் முதலே பிறமொழிக்கலப்பின்றி எழுதி வந்துள்ளார்; எளிய சொற்களைக் கையாள்வார்; ஆனால், உரைநடையே கவிதை நடையாகச் சிறப்பாக அமையும். இலக்கிய நூல்களில் காணும்  நடையை விட இதழுலகில் அமையும் நடை மேலும் எளிமையாக இருக்கும். எனினும் பிற சொற்கலப்பின்றி எழுதுவார்.  எடுத்துக்காட்டுகள் கூறி அயற்சொல்லை விளக்க வேண்டிய நேர்வுகளில், ஒற்றை மேற்கோள்குறிகளுக்குள் அச்சொல்லைக் குறிப்பார்.
  பேரா.இலக்குவனாரின் உரைநடைபோலவே அவரது பாடல்களும் பாவியங்களும் பா இலக்கியங்களும் செந்தமிழ் மணக்கும் எளிய நன்னடையாக இருக்கும். எனினும், அவரின் சில  உரைநடைக் கருத்துகளைப் பார்ப்போம்.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
– இலக்குவனார் திருவள்ளுவன்

No comments: