தலைப்பு-இலக்குவனாரின் குருதியோட்டம், மயிலாடன் ; thalaippu-ilakkuvanarinkuruthioattam_mayilaadan

இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம்

  தந்தை பெரியார் மறைவிற்கு 21 நாள்களுக்கு முன்பாகவே கண் மூடினார் நமது பேராசிரியர் சி.இலக்குவனார் (மறைவு 3.9.1973) அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம், எழுதலாம்.
திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர் களுக்குத் துணையாக இருந்து, தந்தை பெரியார் சுற்றுப் பயணம் முழுவதும் அவருடன் அகலாது தொடர்ந்து பயணித்து, தந்தை பெரியார் உரையாற்றுவதற்கு முன்னதாகப் பேராசிரியர் இலக்குவனாரின் உரை அமைந்துவிடும்.
இது எத்தகைய பெரும் பேறு அந்தப் பெருமகனாருக்கு. தமிழ்ப் புலமை, ஆங்கிலப் புலமை என்பது அவர்தம் இரு விழிகளாகும்.
ஆங்கிலத்தில்  அவர் மொழி பெயர்த்த தொல்காப்பியத்தைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றார். ‘(இ)யேல்’ பல்கலைக் கழகத்திலும் அளித்தார்.
இனமானமும், மொழிமானமும் இவரின் குருதியோட்டம். 1965 இந்திஎதிர்ப்பின்போது,இவரை வெளியில் விட்டால்  அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு இராது என்று அரசுவழக்குரைஞர் வாதாடும் அளவுக்குப் பெருமைக்குரிய பெரியாரின் சீடர் – ஆம், அந்தத் தமிழ்ப் பேராசான் சிறைச் சாலையையும் முத்தமிட்டவர்தான்.
  வறுமை நோய் பீடித்துத் தின்ன அந்த நிலையிலும், கல்வி வெறியெடுத்து அவர் எந்த நிலையில் பயின்றார். அவர் தங்கிப் படித்த அந்த விடுதி (மன்னர் சரபோசியின் அருட்கொடையால் உருவாக்கப்பட்ட உரத்தநாடு சத்திரம்தான் அது)யின் நிலை என்ன? இதோ அவரே சொல்லுகிறார்:
‘‘விடுதியின் உணவு மூன்று வகையாக ஆயத்தம்செய்து வழங்கப்பட்டது. பிராமணர்களில் ஐயருக்கு ஓரிடம். ஐயங்காருக்கு ஓரிடம்; பிராமணன் அல்லாத மாணவர்களுக்குப் பிறிதோர் இடம். ஐயங்கார் மாணவர் உண்ணுவதை ஐயர் மாணவர் பார்த்துவிட்டால், பின்னர் சாப்பிட மாட்டார்; எழுந்து போய்விடுவார். ஐயர் மாணவர் உண்ணுவதைப் பிராமணர் அல்லாத மாணவர் பார்த்துவிட்டால், ஐயர் மாணவர் உண்ணாமல் எழுந்து போய்விடுவார். பிராமணர் அல்லாத மாணவர்களில் முதலியார், சைவ வேளாள மாணவர்கள் ஏனைய பிராமணர் அல்லாத மாணவர்களில் இருந்து பிரிந்து தனியறையில் உண்டு வந்தனர். அவர்கள் உண்பதையும் பிராமணர்கள் ஏனைய சாதி மாணவர்கள் கண்டுவிடக் கூடாது. 

  அவ்வறைக்கு வெளியே பெரிய கூடத்தில் மற்ற மாணவர்கள் உண்ணவேண்டும். அவர் களிலும் சைவரை, அரைச் சைவராகக் கருதி அவர்களுக்கு முதலில் வைத்து உணவு வழங் கப்படும். அவர்களுக்குஉணவு வழங்கிவிட்டுத்தான் மற்றவர்களுக்குப் பரிமாற வேண்டும். இவ்வரிசையில் ஆதிதிராவிட மாணவர்கள் கடைசியில் உட்கார்ந்திருப்பர். சாதிக் கொடுமை இவ்வாறு தனிச் செங்கோல் செலுத்தியது.’’ (இலக்குவனாரின் ‘என் வாழ்க்கைப் போர்’ நூலிலிருந்து).

இலக்குவனாரை அறிவது போல, அக்காலச் சூழலையும் அறிய முடிகிறது.
இலக்குவனார் மறைந்தாலும், அவர்களின் மக்கள் அதே நெறியில், உறுதியில் ஒளிவீசுவது இலக்குவனார் மறையவில்லை என்பதற்கு உத்தரவாதமே!
மயிலாடன்
முத்திரை-விடுதலை : logo_viduthalai_muthirai