தலைப்பு-இலக்குவனார் வழியில் செந்தமிழ்நடை 02, திரு ;படம்-இலக்குவனார் திருவள்ளுவன் ;thalaippu_ilakkuvanar_senthamizhnadai2_thiru

பேரா.சி.இலக்குவனார்  வழியில்

செந்தமிழ் நடை பேணுவோம்! –  2 / 2

  தமிழியக்கப்பணிகளாலும் திராவிட இயக்கப்பணிகளாலும் தமிழ் மறுமலர்ச்சி ஏற்பட்டது குறித்து மகிழ்ந்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார். அவர், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று புதுமைப் பாவலர்கள்  முழக்கம் செய்தனர். எங்கு நோக்கினும் இன்பத்தமிழ்; செந்தமிழ்; இதழ்களில் செந்தமிழ்மேடைப்பேச்சுகளில் நற்றமிழ்; மாநாடுகளில்வண்டமிழ்; நற்றமிழில் பேசுதலே  நற்புலமைக்கு அடையாளம் என்ற எண்ணம் உருப்பெற்று விட்டது. நமஃச்காரம் போய் வணக்கம் வந்தது. சந்தோசம் மறைந்து மகிழ்ச்சி  தோன்றியது. விவாகம்  விலகித் திருமணம் இடம் பெற்றது. வருசம் கழிந்து ஆண்டு  நிலை பெற்றது. இவ்வாறு தமிழ் மீண்டும் மலரத் தொடங்கியது.
 பழந்தமிழ் (1962 )(இலக்குவனார் இலக்கிய இணைய மறுவெளியீடு) பக்.214
  இருந்தாலும் தமிழ் மறுமர்ச்சி 1967இற்குப்பின்னர் மெல்ல மெல்லத் தேய்ந்தது குறித்துப் பெரிதும் கவலைப்பட்டார். இப்பொழுது நிலைமை மேலும் மோசமாக உள்ளது.  தமிழ்ச்சொற்கள்  யாவை, அயற்சொற்கள் யாவை  என அறியாமலே மக்கள் பிற மொழிச் சொற்களைக் கயைாண்டு வருகின்றனர். அருந்தமிழ்ச் சொற்களை விலக்கி வருகின்றனர். இனியேனும் நாம் (நல்ல)தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் நம் கடமையாகக் கொள்வோம்.
  தமிழ்ச்சொற்களின் ஒலி இனிமை, சொல்வளம் குறித்துப் பேரா.இலக்குவனார் பின்வருமாறு உணர்த்துகிறார்.
  தமிழ் என்று தோன்றியது என்று காலவரையறை செய்ய முடியாது; அது உலகமொழிகளின் தாய் என்று சொல்லக்கூடியது; இந்திய மொழிகளின் தாய் என்று எளிதே நிலைநாட்டப்படும் பெருமையை உடையது. இனிய இலக்கியங்களையும் பண்பட்ட இலக்கணத்தையும் பெற்றிருப்பதனால் மட்டும் சிறப்புடையது அன்று. மொழி என்ற அளவிலும் அதனின் இனிமைப் பண்பாலும், எளிய அமைப்பாலும் கற்போர் உள்ளத்தைக் கவரக்கூடியது. தமிழைக் கற்கத் தொடங்கி அதன் சுவையை நுகரத்  தொடங்குவரேல் ஏனைய மொழிகள் தமிழோடு ஒப்பிடப்படுமிடத்து இனிமையற்றதாகவே தோன்றும். தீந்தமிழ் என்றும் இன்பத்தமிழ் என்றும் சொல்லுவதற்கேற்ப அமைந்துள்ளமையை யாவரும் அறிவர். அதன் வடிவ அமைப்பே  உயிருக்கே இன்பம் அளிக்கக்கூடியதாகும்.  அதனுடைய சொற்களின் அசையமைப்பும் ஒலி  இனிமையும்  சொல்வளமும் சொற்பொருள் சிறப்பும் தமிழுக்குரிய உயர் இயல்புகளுள் முதன்மை பெற்றனவாகும்.
– பழந்தமிழ்(இலக்குவனார் இலக்கிய இணைய மறுவெளியீடு) பக்.212
  உரையாசிரியர்கள் ஆரிய முறையில் விளக்கம் அளித்துள்ளமையைப் பேரா. இலக்குவனார் கடிந்துரைத்துத் தமிழ்நெறியை உணர்த்துவார். சான்றுக்கு ஒன்றாக நச்சினார்க்கினியரின் நால்வருண முறைத்திணிப்பைக் கண்டித்துள்ளதைக் காண்போம்.
  உயர்ந்தோ ரெனக் கூறலின் வேளாளரை ஒழிந்தோர் என்றுணர்க என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். முற்றிலும் பொருந்தா உரை கூறித் தொல்காப்பியத்தை இழிநிலைக்குக் கொண்டு வந்துவிட்டனர் உரையாசிரியர்கள். உரையாசிரியர் காலத்தில்  ஆரிய முறையாம் நால்வகை வருண நெறி நாட்டில் செல்வாக்கு  பெற்றிருந்திருக்கலாம். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் இடம் பெற்றிலது. அன்றியும் தொல்காப்பியர் தமிழக மக்கள் வாழ்வினைக் கூற வந்தனரேயன்றித் தமிழர்க்குத் தொடர்பில்லாப் பிற நாட்டினர் வாழ்க்கையைக் கூற நூல் செய்திலர். தொல்காப்பியர்க்குப் பிற்பட்டுத் தோன்றிய திருவள்ளுவர் உழவரை உயர்ந்தோரெனச் சிறப்பித்திருக்கவும் அவர்க்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர், உழவரை – வேளாளரை – உயர்ந்தோரல்லர் என ஒதுக்கியிருத்தல் எங்ஙனம் சாலும்? ஆதலின் உரையாசிரியர்கள் நால்வகை வருணம் பற்றிக் கூறுவன வெல்லாம் தொல்காப்பியர் கொள்கைக்கும் காலத்துக்கும் முரண்பட்டன பொருந்தாதன என்று அறிதல் வேண்டும்.
– தொல்காப்பிய ஆராய்ச்சி(பூம்புகார்பதிப்பகம்) பக்கம் 110
  கற்புநெறி என்பது இருபாலாரும் பின்பற்ற வேண்டிய ஒழுக்கமுறை என்பதே தமிழர்நெறி என்பதைப் பேரா.இலக்குவனார் வலியுறுத்தியுள்ளார். அவற்றில் ஒன்று வருமாறு:
 கற்பு கணவன் மனைவி இருசாரார்க்கும் இருக்க வேண்டிய இயல்புப்பண்பாகும். …….. திருமணத்திற்கு வேண்டப்படுவது காதல் என்றால், காதலுக்கு வேண்டப்படுவது கற்பேயாகும். காதலால் கூடிய இருவரும் என்றும் காதலில் திளைத்து வாழக் கற்பு மிக மிக இன்றியமையாதது.
– தொல்காப்பிய ஆராய்ச்சி(பூம்புகார்பதிப்பகம்) பக்.132
  பேரா.இலக்குவனார் பன்மொழியறிந்த இருமொழிப்புலவர். தாம் எழுதும் இடங்களில் ஆங்கில அறிஞர்களின் மேற்கோளைத் தமிழில் தந்து அடைப்பிற்குள் ஆங்கிலத்தில் குறிப்பிடுவதையும் தம் நடைப்பாங்காகக் கொண்டிருந்தார். சான்றாக மொழியையும் இலக்கியத்தையும் விளக்கும் பின்வரும் கருத்தைக் கூறலாம்.
உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவதும் அறியச்  செய்வதும் மொழி. வாழ்க்கை நுகர்ச்சியை வெளிப்படுத்துவதும் பிறர் அறியச்செய்வதும் இலக்கியம்.  (Literature exists not only in expressing a thing; it equally exists in the receiving of a thing expressed. – Abercrombie, Principles of Literary Criticism, page 28). புலவன் ஒருவன் தான் நுகர்ந்ததை நுகர்ந்தவாறு பிறர் அறிகின்ற வகையில் சொல்லோவியப்படுத்த வேண்டும்.
– தொல்காப்பிய ஆராய்ச்சி(பூம்புகார்பதிப்பகம்) பக் 152
  மொழியால் வாழ்வும்  இனத்தால்  மொழியும் உயரும்; எனவே, தமிழும் தமிழரும் உயர வேண்டும் எனப் பேரா.சி.இலக்குவனார் பின்வருமாறு வலியுறுத்துகிறார்.
  மக்களைப் பிரிவுபடுத்துகின்றவற்றுள் மொழியே பிறப்பொடு வந்து இறப்பொடு செல்வதாகும்.  ஏனைச் சமயமும் சாதியும் நிறமும் பொருள்நிலையும் பதவியும் இடையில் மாற்றத்திற்குரியன. உலகில் உள்ள மக்கள் கூட்டத்தினருள் பெரும்பகுதியினர் மொழியாலேயே வேறுபடுத்தப்பட்டு அழைக்கப்படுகின்றனர். மொழியால் மக்களினம் பெயர் பெற்றதா? மக்களினத்தால் மொழி பெயர்பெற்றதா? எனின், தமிழர்களைப் பொறுத்தவரை மொழியால்தான் மக்களினம்  பெயர் பெற்றுள்ளது. தமிழ் என்றாலும் தமிழர் என்ற பொருளுண்டு. பழந்தமிழ்பற்றி அறிந்த நாம், பழந்தமிழர்பற்றியும் அறிதல் இன்றியமையாதது. தமிழின் உயர்வே தமிழர் உயர்வு; தமிழர் உயர்வே தமிழின் உயர்வு. மக்கள் உயர்ந்தால் மொழி உயரும்; மொழி உயர்ந்தால் மக்கள் உயர்வர்.
பழந்தமிழ் (இலக்குவனார் இலக்கிய இணைய வெளியீடு), பக்.177
பேராசிரியர் இலக்குவனார் வழியில் நாமும்
தமிழ்த்தாயின் மீது படிந்துள்ள
அயற்சொல்அழுக்குகளை அகற்றுவோம்!
அழகுபடுத்துவோம்!
ilakkuvanar-thiruvalluvan
 – இலக்குவனார் திருவள்ளுவன்