Wednesday, October 12, 2016

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] – இலக்குவனார் திருவள்ளுவன்




முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

 [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடக்கம்
 பேராசிரியர் தந்தை மு.சிங்காரவேலர் பத்து மா நிலங்களும் கறவை மாடுகளும் உழவு மாடுகளும் மளிகைக்கடையும் உடைய செல்வத்தில் திளைத்தவரே. தாய் அ.இரத்தினம்மாள் நாட்டாண்மைப் பெருமை பெற்றிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவரே. இரு வாசல் இருப்பின் செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்ட அக்காலத்தில் அத்தகைய இரு வாசல் உடைய மிகச் சில வீடுகளில் இவர்களின் வீடும் ஒன்று. என்ன இருந்து என்ன? தந்தையின் இழப்பால் எல்லாம் இழந்த நிலைக்கு ஆளாயினர். இதனை அறிந்தால்தான், பேராசிரியர் எத்தகைய சூழலில் தமிழ்நலன்நாடும் போராளியாக வாழ்ந்துள்ளார் என்பதை நாம் உணர முடியும்.
 கவி வல்ல முத்து அவர்களின் மகனான சிங்காரவேலர் பேராசிரியரையும் அவரின் தமையனான நல்லபெருமாளையும் கல்வியில் உயர்நிலை யடையச் செய்ய வேண்டும் என எண்ணிக் கல்வி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். தொடக்கத்தில் வீட்டிலேயே ஆசிரியர் ஒருவரை வரவழைத்துக் கற்பிக்கச்செய்தார். பிற பிள்ளைகளும் இங்கே வந்து கற்றுக்கொண்டனர். அவருக்கு ஒவ்வொரு வேளை ஒவ்வொரு வீட்டில் உணவு எனத் திட்டமிட்டபடி உணவு கிடைக்கவில்லை என   வேறிடம் சென்று விட்டார். அதனால் பக்கத்து ஊரான பஞ்சநதிக்குளத்தில் உள்ள சுப்பையாவாத்தியார் என்பவர் வந்து நடத்திய திண்ணைப் பள்ளிக்கூடம் சென்று பயின்றார். நன்றாகக் கற்பிக்கப்பட்டாலும் இத் திண்ணைப்பள்ளிக்கூடமும் நிலைக்கவில்லை. பின்னர் வைத்தியலிங்க(த் தேவ)ர், சீனுவாச(த்தேவ)ர் ஆகியோர் வீட்டுத் திண்ணைகளில் நடைபெற்ற பள்ளிக்கூடம் சென்று பயின்றார். இவர் தந்தையாரைப் போன்று பிள்ளைகளைக் கல்வியில் வல்லவர்களாக ஆக்குவதில் நாட்டம் கொண்ட கு.சி.அமிர்தலிங்க(த் தேவ)ர் என்பவர் தம் வீட்டையொட்டியே பள்ளிக்கூடம் ஒன்று அமைத்தார். அங்கு ஆசிரியர் கண்ணுசாமி(பிள்ளை) அனைவருக்கும் பாடங்கள் கற்பித்தார். இங்கே பேராசிரியர் தம் 7 ஆம் அகவைக்குள்ளாகவே ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிசாரம், கிருட்டிணன் தூது, நிகண்டுகள், கீழ்வாய் இலக்கம், மேல்வாய்இலக்கம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என அனைத்தும் கற்றார். மாலையில் விளையாட்டு, இரவில் நாடகப்பயிற்சி, கலைநிகழ்ச்சிகள், வழிபாட்டுப் பாடல் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்பட்டமையால் முழுமையான கல்வியாக இப்படிப்பு அமைந்தது எனலாம்.
 ஆனால், பிள்ளைகள் தொடக்கக்கல்வி பயிலும் சிறு பருவத்திலேயே, மார்கழித்திங்கள் ஒன்றில், திருவிழா ஒன்றிற்குச் சென்ற தந்தையார் – பிள்ளைகள் பிற குழந்தைகள்போல் தின்பண்டங்கள் கேட்காமல் புத்தகங்கள் கேட்டதால் மகிழ்ந்து, கேட்ட புத்தகங்களை வாங்கி வந்த தந்தையார் – உடனே வயிற்றுப் போக்கு(காலரா) நோயையும் அல்லவா காசில்லாமலே வாங்கி வந்து விட்டார். போதிய மருத்துவ உதவி இல்லாமல் அல்லலுற்ற அக்காலச்சூழல், இளமையிலேயே தந்தையாரின் உயிரைப் பறிக்க வழி வகுத்து விட்டது; மருத்துவர் வந்தும் காலம் கடந்த நிலையால் அன்பு மனைவியையும் அருமை மக்களையும் தவிக்க விட்டு இயற்கை எய்தினார். குடும்பத் தலைவரை இழந்தபின் குடும்பம் மாலுமி இல்லாத கப்பல்போல் தடுமாறத்தானே செய்யும். கடன்பெற்றோர் திருப்பித் தராததாலும் மளிகைக்கடைக்கு வரவேண்டிய வருவாய் நின்று போனதாலும் அன்றாடக் குடும்பச் செலவிற்கு மாறி மாறி மாடுகள், உடைமைமாற்றம் ஆயின. வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் தடைகளை உடைக்கக் கடன்;  கடன்சுமையில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு நிலமாக விற்பனை என நிலப்பரப்பும் சுருங்கியது. கூலிக்குப் போதிய ஆட்கள் அமர்த்த இயலாமையால், பேராசிரியரே களையெடுத்து, நாற்று நட்டு, அறுவடை செய்து, அனைத்து உழவு வேலைகளையும் சிறு அகவையிலேயே பார்த்துள்ளார். எனினும்  உழுவதற்கு உரிய மூத்தோர் இன்றி நிலமகளும் புறக்கணிக்க வறுமை ஆட்கொண்டது. இருப்பினும் தாயாரின் பேரார்வமும் பேராசிரியரின் கல்வி நாட்டமும் நின்று போன பள்ளி வாழ்க்கையைத் தொடரச் செய்தது. தந்தையார் இருந்தவரை கட்டணம் செலுத்திப் பயின்றவர் தமையனுடன் சேர்ந்து வாய்மேட்டுக்கடைத் தெருவில் தொடங்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்ந்தார்.
  தமையனார் ஓராண்டிலேயே படிப்பை நிறுத்திக் கொண்டாலும் பேராசிரியர் கல்வியைத் தொடர்ந்தார். தலைமை ஆசிரியர்    சோம சுந்தரம்(பிள்ளை) அவர்களின் இனிய பண்பும் அன்பும் மாணவர்களைக் கவர்ந்தன. ஆசிரியர் வீரபுரம் குமாரசாமி நகர்ப்புற மாணவர்கள் போல் தோற்றப்பொலிவான உடைஒழுங்கையும் மிடுக்கான நடையையும்  ஏற்படுத்தினார். இப்பள்ளிக்கு வந்த கல்விக்கூடக் கண்காணிப்பாளர் ஒருவர்,
 “மகன்தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
 என்நோற்றான் கொல்லெனும்சொல்”
 என்னும் திருக்குறளை விளக்கி ஆற்றிய உரை பேராசிரியரின் இளம் உள்ளத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சிறந்த சொற்பொழிவாளராக வேண்டும்; உலகம் போற்றும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்னும் உயர்வான எண்ணத்தை விதைத்தது; எண்ணிய எண்ணியாங்கு எய்தும் முயற்சியில் ஈடுபடச் செய்தது.
 ஆனால், ஐந்தாம் வகுப்பு முடிந்த பின்னர் மீண்டும் சிக்கல். கல்விக்கு முற்றுப்பள்ளி இட்டுக் குடும்பச் சுமையைத் தமையனுடன் பகிர்ந்துகொள்ளும் நிலை. கல்விக்கு ஏற்பட்ட முற்றுப்புள்ளியைத் தொடர்புள்ளியாக மாற்ற வேண்டும் என்பது பேராசிரியரின் பேரவா. அன்னையாருக்கும், மூத்தவன்தான் குடும்பச்சுமையை ஏற்றுப் படிப்பை இழந்தான் என்றால் இளையவனும்  இழக்க வேண்டுமா என்ற எண்ணம்; தன் கணவர் எண்ணத்திற்கேற்ப இளைய மகனாவது கல்வியில் உயர    வேண்டும் என்ற தளராத ஆசை.
 குடும்ப வருவாய்க்காகத் தமையன் மளிகைக்கடை நடத்தவும் பண்ணையாளை நீக்கிவிட்டமையால், இவர் மாடுமேய்க்கும் பணியில் ஈடுபடவும் வேண்டியதாயிற்று. நன்கு படிக்கும் இவர் மாடுமேய்த்தது கண்டு, ‘ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு மாடு மேய்க்கின்றானே’ என்ற வருத்த உரைகள் ஊராரிடம் ஏற்பட்டன; கல்வியால் உயரவேண்டியவன் கழனியில் உழல்கின்றானே என ஆசிரியர்களுக்கும் வருத்தம்.
 “யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
 சாந்துணையும் கல்லாத வாறு”
 என்கிறார் அல்லவா தெய்வப்புலவர் திருவள்ளுவர். தெய்வப்புலவரால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவர் நெறியை வாழ்நாள் முழுவதும் பின்பற்றிப் பரப்பிய பேராசிரியர் தொடக்கத்திலேயே தொடர்ந்து கற்க வேண்டும் என்னும் எண்ணப் பிடிப்பில் இருந்தார். பேராசிரியரின் விடாப்பிடியான எண்ணமும் மகன் கல்வியாளராக வேண்டும் என்ற அன்னையாரின் துடிப்பும் நான்காண்டுகளில் பயனை அளித்தன.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

No comments: