முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙு] போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி


 பெரும்புலவர் ந.மு.வேங்கடசாமி(நாட்டாரின்) இளவல் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர் அவர்கள் அடுத்த தலைமையாசிரியராய் மாறுதலில் வந்தார். இவர் அனைவரையும் சிவநெறிக்கண் திருப்பி ஒழுங்கையும் பண்பாட்டையும் நிலைநாட்டினார். தமிழாசிரியர் நாராயணசாமி(பிள்ளை) ஓய்வு பெற்ற பின் மாறி வந்த தமிழாசிரியர் சாமி. சிதம்பரனார் பேராசிரியர் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அனைவரிடமும் தூய தமிழ்ப்பற்றை வளர்த்த தன்மதிப்புஇயக்கப் பற்றாளரான அறிஞர் சாமி சிதம்பரனார் பேராசிரியர்பால் பேரன்பு கொண்டவர்;  ‘இலட்சுமணன்’ என்னும் பெயரை ‘இலக்குவன்’ என்று மாற்றியவரும் இவரே. பேராசிரியர், அரசர் மடத்து நடுநிலைக் கல்விக்கூடத்தில் மூன்றாம் படிவத்தில் வெற்றி பெற்றதும் உரத்தநாடு உயர்நிலைக்கல்விக்கூடத்தில் நான்காம் படிவத்தில் சேர்ந்தார்.
 நான்காம் படிவம் எனப்படும் ஒன்பதாம் வகுப்பில் பேராசிரியர் விருப்பப்பாடங்களாகத் தமிழையும் ஆங்கில நாட்டு வரலாற்றையும் தெரிவு செய்து படித்தார். பெரியவர் பொன்னண்ணாக் களத்தில் வென்றார் தமிழாசிரியராக மாறி வந்து மேலும் தமிழ் உரம் ஊட்டினார். அடுத்துத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற சாமிநாத(பிள்ளை) அவர்களும் தன்மான உணர்வினை ஊட்டினார். பொது அறிவியலைக் கற்பித்த ஆசிரியர் சாமி வேலாயுதம்(பிள்ளை) அவர்களும் சிறந்த தமிழறிஞர். பின்னாளில் ‘தமிழரசி’ என்னும் தமிழ்ப்பாடல் தொகுப்பு நூலையும் ‘திருக்குறள் சொல்லடைவு’ நூலையும் வெளியிட்டவர். அவர், இவரைப் ‘பெரும்புலவராகப் புகழ் பெறுவீர்’ என வாழ்த்தியதைப் பெரும் பேறாகக் கருதி மகிழ்ந்தவர் பேராசிரியர்.
 வரவேற்புப்பா, வழியனுப்புப் பாடல் என விழாக்களில் பாடல்கள் பாடியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்பொழிவுகள் ஆற்றியும் பேராசிரியர், மாணவர்கள் உள்ளங்களில் மட்டுமல்லாமல் ஆசிரியர் உள்ளங்களிலும் இடம் பெற்றார்.
 இத்தகைய சூழலுக்குத் தன்மதிப்பியக்கத் தலைவர் பன்னீர்செல்வம் அவர்களும் பெரியாரின் தொண்டுமே காரணங்கள் என்பதைப் பின்வருமாறு தம் வாழ்க்கை வரலாற்று நூலில் நினைவுகூர்கிறார் பேராசிரியர்.
 “பன்னீர்செல்வம் அவர்கள் சிறந்த ஆசிரியர்களை நியமித்து உரத்தநாட்டு உயர்நிலைக் கல்விக்கூடத்தை ஓர் எடுத்துக்        காட்டுக் கல்விக்கூடமாக ஆக்க  வேண்டுமென்று விரும்பினார். எல்லா ஆசிரியர்களையும் பிராமணரல்லாதாராகவே நியமித்துப் பிராமணரல்லாதவர்களும் சிறந்த ஆசிரியர்களாக விளங்குவார்கள் என உலகுக்கு அறிவிக்க வேண்டுமென்பதும் அவர் கொள்கை. ஏனெனில், பிராமணர்கள்தாம் ஆசிரியர் தொழிலுக்குரியவர்கள் என்ற நம்பிக்கை  வேரூன்றியிருந்த காலம் அது. அன்றியும் படிப்பதற்குத் தகுதியானவர்களும் பிராமணச் சிறுவர்கள்தாம் என்று கூறிவந்த காலமும் அதுதான். ‘வயலிலும் வரப்பிலும்  வேலை செய்ய வேண்டிய நீங்கள், கல்விக்கூடத்தில் சேர்ந்து கொண்டு எங்களைத் தொல்லைப் படுத்துகின்றீர்களே. சுட்டுப் போட்டாலும் உங்கள் நாவில் கல்வி ஏறாது’ என்று பிராமணரல்லாத சிறுவர்களை  நோக்கிப் பிராமண ஆசிரியர்கள் கூறி வந்தனர். உழைப்பதற்கே பிறந்தவர்கள் ஓதுவதற்கன்று என்று மனுநீதியில் கூறப்பட்டுள்ளதை ஒட்டி,  “வேளாண்மாந்தர்க்கு, உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” எனப் பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்திலும் இடைச்  செருகலாக எழுதி வைத்துக் கொண்ட கொடுமை நிகழ்ந்த நாடு அன்றோ இத் தமிழ்நாடு. கல்விக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் உச்சிக்குடுமி வைத்த பிராமணர்களே ஆசிரியர்களாக இருந்து வந்துள்ளனர். மாணவர்களிலும் பெரும்பாலோர் பிராமண வகுப்பினரே.”
  தமிழர்க்குத் தன் மதிப்பை உணர்த்திய பெரியாரால் பள்ளிப் பருவத்திலேயே ஈர்க்கப்பட்டவர்; நீதிக்கட்சித் தலைவர்கள் ஆற்றிய தன்மதிப்பியக்கப் பணிகளால் தமிழர் நலனடைந்ததைக் கண்ணாரக் கண்டவர்; எனவேதான் பேராசிரியர் வாணாள் எல்லாம் தன்மானப் பாதையில் தடம் புரளாமல் வாழ்ந்தார்; பிறரையும் அவ்வாறு தன்மதிப்புடன் வாழ அறிவுறுத்தினார்.
  ஆரியத்தின் தீமைகளை உணர்த்தினாலும் பிராமண மாணவர்கள் கல்வி கற்பதற்கான உதவிகளைச் செய்யத் தவறியதில்லை. சாதி வேறுபாட்டைப் போக்குவதற்காகச் சாதியத்தை எதிர்த்தாரே தவிர, சாதி அடிப்படையில்  வேறுபாடு காட்டவில்லை. (பின்னாளில் புதுச்சேரிப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் மத்திய அரசின் திட்டக்குழுவில் உறுப்பினராகவும் திகழ்ந்த) முனைவர் வேங்கடசுப்பிரமணியன் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பேராசிரியரைப் போற்றியதன் காரணம் அதுதான்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்