தலைப்பு-மறக்கமுடியுமா, குயிலன், எழில்.இளங்கோவன் ; thalaippu_markkamudiyuma_kuyilanezhililangovan

மறக்க முடியுமா? – கவிஞர் குயிலன்


அறிஞர்களுள் பன்மொழிப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். கவிஞர்களுள் அப்படி இருந்திருக்கிறார்களா?
கவிஞர் குயிலனைத் தவிர, வேறுயாரும் பன்மொழிப் புலமைக் கவிஞர்களாக இருந்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற கவிஞர் குயிலன் படித்தது, ஆறாம் வகுப்பு மட்டுமே.
இராமநாதபுரம் மாவட்டம் பூசேரி என்ற சிற்றூரில் குருமூர்த்தி (பிள்ளை)-வெயில் உவந்தம்மாள் இணையரின் மகனாகப் பிறந்த கு.இராமலிங்கம்தான் பின்னாளில் கவிஞர் குயிலனாக மாறுகிறார்.
1939இல் பருமாவில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் போதே எழுத்தில் நாட்டம் கொண்டிருந்தார் குயிலன்.
அவரின் தமிழக வருகைக்குப்பின் வ.ராவின் ‘பாரத தேவி’ இதழில் ‘காக்கை மனிதனைப்பார்த்து கேலி செய்யும்’ என்று ஒரு கவிதை எழுதினார். இதுவே இவரின் முதல் கவிதை.
 1947இல் ‘செங்குமுதம்’ எனும் இவரின் குறுங்காப்பியம் இவரைக் குயிலனாக அறிமுகம் செய்தது.
எமிலி  சோலோ எழுதிய ‘தெரசா’, பி.எசு.பெக்சன் எழுதிய ‘தி பேன்ட் மைன்ட்’ ஆகிய ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தார் குயிலன். சமற்கிருதத்தில் எழுதப் பெற்றிருந்த ‘விவேக சூடாமணி’ என்ற நூலைத் தமிழில் கவிதை நூலாக மொழிபெயர்த்தார்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இவரின் எழுத்தாக்கங்களும், மொழி பெயர்ப்பும், குறிப்பிடத்தக்கன. குறிப்பாக இம்மொழித் திரைப்படங்களின் உரை யாடல்களைத் தமிழ் மொழி மாற்றாகப் பல படங்களுக்கு இவர் எழுதியிருக்கிறார். 17 படங்களில் 52 பாடல்களை எழுதியுள்ளார்.
56 உரைநடை நூல்கள், 9 புதினங்கள், 7 கவிதை நூல்கள், 2 நாடகங்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள், “தமிழும் மலையாளமும்”, “தமிழும் கன்னடமும்” ஆகிய இரு நூல்கள் என இவர் எழுதிய நூல்கள் 116. இதில் மொழிபெயர்ப்புகளும் அடங்கும்.
 தொடக்கத்தில் இவர் பேராயக்கட்சி(காங்கிரசு)க்காரர். பிறகு பொதுவுடைமையாளராக மாறித், தன்னைக் கட்சிப்பணியில் இணைத்துக் கொண்டார்.
தொடக்கத்தில் நாமக்கல் கவிஞர் வே.இராமலிங்கம் பரிந்துரையின் அடிப்படையில், பேராயக்கட்சி (காங்கிரசு)க்காரரான சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணையில், அதன் வெளியீடாக வெளி வந்த ‘மாலதி’ என்ற வார இதழின் ஆசிரியர் ஆனார்.
இவர் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்த பின், 1948இல் ‘தென்றல்’ என்ற இதழைப் பொதுவுடைமைக் கொள்கை தாங்கிய இதழாகத் தொடங்கினார்.
அந்தக் காலக்கட்டத்தில் பொதுவுடைமைக் கட்சிக்கு அரசு தடைவிதித்து,  சனசக்தி அலுவலகம் மூடிமுத்திரையிடப்பட்டது.
பொதுவுடைமைத் தலைவர்கள் தலைமறைவனார்கள். அந்தச் சமயம் ‘முன்னணி’ என்ற அரசியல் வார இதழைத் தொடங்கினார் குயிலன்.
தலைமறைவாக இருந்த தலைவர்களுக்கு இந்த இதழ் ஒரு தொடர்பு இதழாக அமைந்தது. இந்த முன்னணி இதழில் குயிலனுடன் இணைந்து பணியாற்றியவர் கவிஞர் தமிழ்ஒளி.
ஒருமுறை தேர்தலை எதிர்த்து ஒரு தலையங்கம் எழுதினார் குயிலன். அதன் தலைப்பு, “மஞ்சள் பெட்டியில் மண்ணைப் போடுங்கள்”.
இஃது ஆட்சியாளர்களின் கோபத்தைக் கிளறியது. கைது செய்யத் தேடப்பட்டார் கவிஞர். அவரோ தலைமறைவாகிப்போனார்.
ஆனாலும் பிறகு கைது செய்யப்பட்ட அவர் மூன்று மாதங்கள் விசாரணைக் கைதியாகச் சிறையில் இருந்தார்.
அப்போது அவருக்காக வாதாடிய வழக்கறிஞர், தோழர் கிருட்டிணமூர்த்தி. இவர் ஒரு தொழிற்சங்கவாதி மட்டுமல்ல, சென்னை மாநகரத்தலைவராகவும் இருந்தவர் என்பது குறிக்கத்தக்கது.
இப்படிக் குயிலன் தலைமறைவாக இருந்த போது இவருடன் தலைமறைவாக இருந்த தலைவர்கள் கே.பாலதண்டாயுதம், எம்.கல்யாணசுந்தரம், ஐ.மாயாண்டி பாரதி ஆகியோர் என்பது குறிக்கத்தக்கது.
பின் வந்த காலங்களில் முகவை இராசமாணிக்கம், கவிஞர் தமிழ்ஒளி ஆகியோருடன் இணைந்து “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்” அமைத்தார்.
  1946இல் ‘இலக்கியமன்றம்’ 1952 இல் ‘வாரம்’ இதழ் ஆசிரியர், 1961-இல் ‘குயிலன் பதிப்பகம்’ என்று குயிலனின் எழுத்துப்பணி தொடர்ந்தது.
தமிழகக் ‘காங்கிரசு’ அமைச்சரவையின் கல்வி அமைச்சர் பக்தவச்சலம் எதிரிலேயே ‘காங்கிரசை’ எதிர்த்து, விமரிசித்துக் கவிதை பாடியவர் குயிலன்.
அறிஞர் அண்ணாவின் ‘திராவிடநாடு’ இதழில் குயிலனின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. குயிலனின் கவிதைகளைக் ‘காங்கிரசுக்கு’ எதிராக மேற்கோள் காட்டி அண்ணா பேசியிருக்கிறார்.
ஒலியும் வரியும் மொழியும்” என்ற தன் நூலைத், தந்தை பெரியாருக்குக் காணிக்கை ஆக்கிய கவிஞர் குயிலன், ஆவணி 30, 1953 / 1922 ஆம் ஆண்டு செட்டம்பர் 14 அன்று பிறந்தார். கார்த்திகை 23, 2033 / 2002ஆம் ஆண்டு திசம்பர் 8 அன்று மறைந்தார்.
புதுத்தமிழ்க் கவிமலர்கள்” என்ற நூல்தொகுப்பில் இருந்து அவரின் ஒரு கவிதை :
வீர சுதந்திர நாட்டை – -ஆளும்
வீண்வெறி கொண்ட அரக்கன்
போரிட்டு மக்கள் இரத்தம் – -மிகப்
பொங்கி வழிந்திடச் செய்து
வானமெலாம் வெறும் இரத்தம் – மலை
வாவியெலாம் வெறும் இரத்தம்
ஈன இருளிடம் தோற்று -ஒளி
எங்கு மறைந்தது காணோம்?
காரிருள் போக்கிட வேண்டி – வீதிக்
கம்பங்கள் மீதிட்ட தீபம்
பேரடி மைமிகு நாட்டில் – எழப்
பெற்றது சுயேச்சையின் எண்ணம்
அடக்கு முறையென்ற காற்று – அதை
அணைக்க முயன்றது பாவம்
நடக்கும் அதன் செயல் அப்போ – மறு
நாளில் உதித்திடும் சூரியன்
– கவிதையின் தலைப்பு ‘இருளும் ஒளியும்’.

எழில்.இளங்கோவன் ; ezhililangovan
எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர் – ஆகத்து 1 – 2016
karunchattai-thamizhar01