முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை –   தொடர்ச்சி

 கல்லூரியின் முதல்வராக இருந்த வேதாந்த(ம் ஐயங்கா)ர் ஓய்விற்குப் பின்பு பி.சா.சுப்பிரமணிய(சாசுதிரி) முதல்வராக வந்தார்; ஆராய்ச்சி ஆர்வம் மிக்கவராக இருந்தாலும் சமசுகிருதப் பற்றால் தவறான கருத்துகளையும் வெளிப்படுத்துவார். ‘இலக்குவன்’ என்னும் பேராசிரியரின் தமிழ்ப் பெயரையே விரும்பாத முதல்வர் இவரைச் சமசுகிருத வெறுப்பாளராக எண்ணினார். தமிழின் தொன்மை, தூய்மை முதலானபற்றிய தவறான கருத்துகளை அவர் தெரிவிக்கும் பொழுதெல்லாம் சான்றுகளுடன் பேராசிரியர் மறுக்கத் தவறுவதில்லை. “இவ்வாறு எவர் தவறு செயினும் துணிவுடன் எடுத்துக் காட்டி எதிர்க்கும் திறன் அன்றே இலக்குவனாரிடம் இயல்பாக அமைந்திருந்தது. கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் மட்டுமல்ல. அது பிற்காலத்திலும் ஏன்? வாழ்வின் இறுதிவரை இந்த நெஞ்சுரம் இருந்தே வந்தது..” இவ்வாறு, பேராசிரியர் இலக்குவனார் புலவர் கல்லூரியில் பயின்ற காலத்தில் ஒன்றாகப் பயின்ற முதுபுலவர் சி.இராமசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (புலவர்மணி இரா.இளங்குமரன்: செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்: பக்கம் 27)
  வகுப்புகளில் மாணவர்கள் ஐய வினா தொடுப்பது இயற்கையே. சிலர் கிண்டலாகக் கேள்வி கேட்பதும் தன்னலம் சார்ந்து ஆசிரியர்களை எதிர்த்துப் பேசுவதும் உண்டு. ஆனால், பேராசிரியரின் வினாக்கள் தமிழ் எதிர்ப்பைச் சாய்க்கும் கணைகளாகும். தமிழாசிரியர்களே தொல்காப்பியத்தைப் பற்றி முழுமையாக அறிந்திராத அக்காலத்தில் நன்கு அறிந்து முதல்வரின் தமிழ்ப்பகைக் கருத்துகளை வீழ்த்துவனவே அவை. உடன் பயிலும் மாணவர்கள் தவறாக உருவானால் பின்னர் அவர்களால் உருவாக்கப்படும் மாணவர்களும் திசைமாறித்தானே போவர். வகுப்பு நடைபெறும் முன்னரே பாடக் கருத்துகளை நன்கு படித்திருந்ததால்தான் அவரால் தெளிவாகப் பேச முடிந்தது. தமிழின் உயர்வையும் சிறப்பையும் மறைத்தும் இழித்தும் பழித்தும் வகுப்பு எடுக்கப்படும் பொழுது, வெறும் வினாக்கள் எழுப்பினால் மழுப்பலான விடைகளால் அமர்ந்து அமைதி காக்கும் நிலை வரலாம். எனவே, கேள்வியுடன் நில்லாமல், தக்க சான்றுகளுடன் மறுத்து விளக்கி உள்ளார். இதனால் முதல்வரின் மறைமுக எதிர்ப்புகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளானாலும் பேராசிரியர் மனங்கலங்காமல், துணிவுடன் தமிழ் காக்கும் அறிவுப் பணியில் ஈடுபட்டார். இவ்வாறு, ‘கெடல் எங்கே தமிழின் நலம், அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்’யும் போராளியாகப் படிக்கும் பொழுதே பேராசிரியர் திகழ்ந்துள்ளார்.
 களத்தில் போராடுபவர்கள் கல்வித்தளத்தில் காலூன்றத் தவறி விடுகிறார்கள். கல்வியில் கரைகாண எண்ணுபவர்கள் கல்வி மக்களுக்காக என்பதை உணராமல் களத்தை மறந்து விடுகிறார்கள். பேராசிரியர் கல்வியிலும் கருத்து செலுத்தினார். களத்திலும் நின்று வென்றார்.  எனவேதான் பள்ளி வாழ்க்கையில் அவ்வப்பொழுது  சொற்பொழிவாற்றியதை விரிவாக்கினார். தம் அன்பு நண்பர்கள் அ.கிருட்டிணமூர்த்தி, அன்பு கணபதி, முருக இலக்குவன் ஆகிய மூவருடனும் இணைந்து தூயதமிழ்ப்பரப்புரை மேற்கொண்டார். இதனால் தமிழ்க்குரவர் என இந்நால்வரும் அழைக்கப் பெற்றனர். ஊர் ஊராகத் தெருத் தெருவாகச் சென்று மேற்கொண்ட பரப்புரை நற்பயனையே விளைவித்தது. படித்த முதியவர், படிக்கும் இளையர் என எல்லாத் தரப்பினரும் கேட்டு உணர்வு பெற்றனர். தன்னைப் பற்றி எண்ணாமல் நாட்டு மக்களைப்பற்றி எண்ணிச் செயல்படுபவன்தானே போராளி. அந்த வகையில் பேராசிரியரின் பரப்புரைப் பணியும் அவரின் போராட்ட வாழ்க்கையின் ஒரு பகுதிதான் எனலாம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்