புரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார்
அஞ்சா நெஞ்சும் அதிஉயர் கல்விச் செறிவும் வரலாற்றுத் தெளிவும் ஒருங்கே உருவான அறிஞரின் கதை. (17.11.1909 – 03.09.1973)
1965, இந்தி எதிர்ப்புப் போராட்ட காலம்.
உளவுத்துறைக்கு ஒரு செய்தி வருகிறது. தமிழகமெங்கும் போராட்டத் தீ
பரவிக்கொண்டிருக்கிறது. மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் இந்திய அரசியல்
அமைப்புச் சட்டத்தைக் எரிக்கப் போகிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.
உடனே விழிப்படைந்த உளவுத்துறையினர்
அறிஞர் அண்ணாவிடம் வருகிறார்கள். மாணவர்கள் போராட்டத்தை
நிறுத்திக்கொள்ளும்படி அறிக்கை விடும்படி கேட்கிறார்கள். மாணவர்களின்
போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் அதை நிறுத்தும்படி கேட்பது பொருத்தமாக
இருக்காது என அண்ணா மறுக்கிறார்.
அத்துடன் மதுரையில் இருக்கும் மாணவர்கள்
நான் சொல்வதைக்கூட கேட்பார்களோ தெரியாது. அவர்களின் பேராசிரியர் சொன்னால்
தான் கேட்பார்கள் என சொல்கிறார்.
யார் அந்தப் பேராசிரியர் எனக் காவல் துறை
வினவுகிறது. உடனே மதுரைக்குச் சென்று அந்தப் பேராசிரியரைச் சந்திக்கிறது.
அண்ணாவிடம் கேட்டதையே அவரிடமும் கேட்கிறது.
நியாயமான காரணத்துக்காகப்
போராடுகிறவர்களை போராட்டத்தை நிறுத்தும்படி கேட்டால் நான் நல்ல ஆசிரியனாக
இருக்க முடியாது என் பேச்சைக் கேட்டு ஒரு வேளை அவர்கள் நிறுத்தினால்
அவர்கள் நல்ல மாணவர்களாகவும் இருக்கமுடியாது என உறுதியாகக் கூறுகிறார்
அந்தப் பேராசிரியர்.
தொடர்ந்து மாணவர்கள் அரசியல் அமைப்புச்
சட்டத்தை எரிக்கிறார்கள். (அன்றைய போராட்டத்தில் இன்றைய எழுத்தாளர்கள்
சூரியதீபன், கவிஞர்கள் மேத்தா இன்குலாப் போன்றவர்களும்
பங்கெடுத்திருந்தார்கள்.) மாணவர்கள் கா.காளிமுத்து (முன்னாள் அமைச்சர்)
நா.காமராசன் (கவிஞர்) கைது செய்யப்படுகிறார்கள்.
ஆனாலும் பாதுகாப்புத் துறையினரின் கோபம்
அந்தப் பேராசிரியர் மீதே அதிகம் இருக்கிறது. அவரோ ஓய்ந்தபாடில்லை.
தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என வலியுறுத்தி “தமிழ்
மொழி உரிமைப் பயணம்” எனும் நடைபயணம் மேற்கொள்ள ஆயத்தமாகிறார்.
அவரைப் பழிதீர்க்க காத்திருந்த காவல்துறை இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்ய ஆயத்தமாகிறது.
‘’உங்களைக் கைதுசெய்யப் போகிறார்கள் தலைமறைவாகுங்கள்’’ என அவருக்குச் செய்தி அனுப்பப்படுகிறது. “தமிழுக்காகச் சிறை செல்கிற தமிழ் அறிஞனாக இருப்பதில் பெருமையடைவேனே தவிர ஒருநாளும் தலைமறைவாக மாட்டேன்” எனச் சீறுகிறார் அந்தப் பேராசான்.
இந்தியப் பாதுகாப்புச்சட்டம் அவர் மீது பாய்கிறது. இந்திய
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்ட முதல் தமிழ் அறிஞர் என்று
வரலாற்றில் இடம்பிடிக்கிறார் ஒரு பேராசிரியர். அவர்தான் பேராசிரியர்
சி.இலக்குவனார். நவம்பர் 17 அவரின் பிறந்த நாள்
1909 நவம்பர் 17 தமிழ்நாட்டின் அன்றைய
தஞ்சாவூர் மாவட்டத்தில் (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம்)
சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
தமது நான்கு வயதிலேயே தந்தையை இழந்தார்.
வாய்மேட்டில் சுப்பையா ஆசிரியர் நடத்திய
திண்ணைப்பள்ளியிலும் கண்ணுசாமி ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும்
பயின்றார். பின்னர் வாய்மேட்டில் அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு
முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு
தடைப்பட்டது.
தமது அண்ணன் நல்லபெருமாளுக்கு உதவியாக வயல்வேலைகளைக் கவனிப்பதும் மாடுகளை மேய்ப்பதுமே அவரது வேலையாயிற்று.
பின்னர் தஞ்சாவூர் சரபோசி மன்னரின்
அறக்கட்டளை சார்பில் இராசாமடம் என்னுமிடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில்
1924ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.
இங்கு இவர் எட்டாம் வகுப்புப்
படித்தபொழுது இலட்சுமணன் என இவரது பெற்றோர் இட்ட பெயரை இவர்தம்
தமிழாசிரியர் சாமி சிதம்பரனார், “இலக்குவன்” என மாற்றச் செய்தார்.
அப்பொழுது முதலே தனித்தமிழ் மீது நாட்டமும் தமிழில் பிறமொழிக்கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனார்க்கு ஏற்பட்டது.
பின்னர் 1924ஆம் ஆண்டில் சரபோசி மன்னரின்
அறக்கட்டளை சார்பில் ஒரத்தநாட்டில் இருந்த உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று
தேர்ச்சி பெற்றார்.
பின்னர் திருவையாறு அரசர் கல்லூரியில்
பயின்று 1936ஆம் ஆண்டில் புலவர் பட்டம் பெற்றார். அங்கு பயிலும்பொழுது
அக்கல்லூரியின் திருவள்ளுவர் மாணவர் கழகச் செயலாளராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில்
கீழைமொழிகளில் இளவர் (B.O.L) பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டம் கலைமுதுவர்
பட்டத்திற்கு இணையாகக் கருதப்பட்டது.
இலக்குவனார் ஆசிரியப்பணி ஆற்றிக்கொண்டே ஆங்கிலத் தேர்வுகளில் வெற்றிபெற்று கலைமுதுவர் ஆனார்.
பின்னர் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் (Origin and Growth of Tamil Language) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து கீழைமொழிகளில் முதுவர் (M.O.L) பட்டமும் பெற்றார்.
1963 இல் முனைவர் பட்டப்பேற்றிற்காக Tholkappiyam in English with critical studies என்னும் ஆய்வேட்டை அளித்து 1963 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார்.
இவரது தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் அணிந்துரை வழங்கிப் பாராட்டியுள்ளார்.
பின்னர் அண்ணா தமிழக முதல்வராகப்
பொறுப்பேற்றபோது இந்நூலைப் போப்பு ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க
நூகலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக வழங்கினார்.
இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற
இடமெல்லாம் தமிழ்மன்றங்களை நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனத்தில்
தமிழ் எழுச்சியும் ஆர்வமும் ஏற்படப் பாடுபட்டார்.
1944 முதல் 1947 வரை இவர் நடத்திய “சங்க இலக்கியம்” வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது.
இலக்கியம் (மாதமிருமுறை), திராவிடக்கூட்டரசு, குறள்நெறி, Kurnlneri, Dravidan Ferderation, எனப் பல்வேறு இதழ்களை நடத்தினார்.
1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது
செய்யப்பட்டுச் சிறைவாழ்வும் பணிநீக்கமும் பெற்ற இலக்குவனார், 1965 மே
முதல் திசம்பர் வரை ஏழு மாதங்கள் தமது ஏட்டை நாளிதழாகவும் நடத்தினார்.
எழிலரசி அல்லது காதலின் வெற்றி, மாணவர்
ஆற்றுப்படை, துரத்தப்பட்டேன், தமிழிசைப் பாடல்கள், என் வாழ்க்கைப் போர்,
அமைச்சர் யார்?, அம்மூவனார், எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 1,
எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 2, திருக்குறள் எளிய பொழிப்புரை,
தொல்காப்பிய விளக்கம், மாமூலனார் காதற் காட்சிகள், வள்ளுவர் வகுத்த
அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்
கருமவீரர் காமராசர், அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து, பழந்தமிழ், தமிழ்
கற்பிக்கும் முறை, தொல்காப்பிய ஆராய்ச்சி, சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்,
Tholkappiyam in English with Critical Studies, Tamil Language, The
Making of Tamil Grammar> Brief Study of Tamil words முதலிய
படைப்புகளுக்குச் சொந்தக்காரர்.
25.01.1965 இல் தொடங்கிய இந்தி
எதிர்ப்புப் போரின் பொழுது ‘அமைச்சர்களைக் கொல்ல முயற்சி செய்தார்’ என்பது
முதலான பதினான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 1.2.1965 இல் கைது
செய்யப்பட்டார்.
அவரது வீடும் அச்சகமும் சோதனைக்கு
உள்ளாயின. ஒரு மாதமும் ஒரு வாரமும் சிறை வாழ்க்கைக்குப் பின்னர்
திருநகரைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்னும் கட்டளையோடும் ‘எப்பொழுதும்
சிறைப்படுத்தப்படலாம்’ என்னும் ஆணையோடும் விடுவிக்கப்பட்டார்.
உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே நேரத்தில்
தமிழைப் பயிற்று மொழி ஆக்கியதைப் போல கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் எல்லாத்
துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பயிற்றுமொழி ஆக்க வேண்டும் என்னும்
கோரிக்கையோடு 5.5.1965 இல் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ் உரிமைப் பெருநடை செல்ல திட்டமிட்டார்.
1.5.1965 இல் நாட்டுப்
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இலக்குவானார் கைது செய்யப்பட்டு வேலூர்
சிறையில் மூன்றரை மாதங்கள் அடைக்கப்பட்டார்.
இதனால் மதுரை தியாகராசர் கல்லூரியில் இவர் ஆற்றிவந்த தமிழ்ப் பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
2.10.71 முதல் 25.12.1971 முடிய சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளில் சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார்.
6.8. 1962 ஆம் நாள் ‘தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்’ என்னும் நோக்கத்தை முன்வைத்து தமிழ்க் காப்புக் கழகத்தைச் சி. இலக்குவனார் தொடங்கினார்.
இக்கழகம் தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க! என்னும் நான்கு செயல் திட்டங்களை முன்வைத்துப் பணியாற்றியது.
பல்வேறு கல்விநிலையப் பணிகளுக்கும்
பணியின்மைக்கும் பின்னர் இலக்குவார், நாகர்கோயில்
தெ.தி.இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து 1970 திசம்பரில் ஓய்வு
பெற்றார்.
மீண்டும் ‘குறள்நெறி’ இதழைத் தொடங்கி
நடத்தியும் நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றியும் தமது தமிழ்ப்பணியைத்
தொடர்ந்த இலக்குவனார் நீரிழிவு நோய் காரணமாக 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 3
ஆம் நாள் காலமானார்.
மு. கருணாநிதி, முனைவர் கி.
வேங்கடசுப்பிரமணியன், நல்லகண்ணு, முனைவர் க. காளிமுத்து, நா. காமராசன்,
பா.செயபிரகாசம், இன்குலாப், முனைவர் பூ. சொல்விளங்கும்பெருமாள், சேடபட்டி
முத்தையா போன்றோர் இலக்குவனாரிடம் தமிழ் பயின்று உள்ளார்கள்.
முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி,
பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ் காத்த தானைத் தலைவர், இலக்கணச்
செம்மல், தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியர்,
இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி
எதிர்ப்புப் படைத் தளபதி, செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல் பல
பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.
‘எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழி அழியும்‘ எனச் சொன்னவர்.
“தொல்காப்பியமே தமிழர்வாழ்வின்
பல்துறைபற்றி அறிய துணைபுரிகிறது. இது இலக்கண நூல் ஆயினும் ஏனைய மொழி
இலக்கண நூல்களில் இருந்து வேறுபடுகிறது. பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல்
உளவியல் வாழ்வியல் முதலிய அனைத்தையும் கி.மு 7ம் நூற்றாண்டிலேயே தன்னகத்தே
கொண்ட தனிச்சிறப்பு மிக்கது” எனச் சொன்னார்.
இவரின் ஆராய்ச்சிக்கு முன்னர்
தொல்காப்பியம் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்குரியது என நம்பப்பட்டு வந்தது.
Thol Kappiam In English With Critical Studies எனும் அவரின் நூல் தமிழின்
பெருமையை உலகறிய உதவுவது.
“உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம்
தமிழகம் என்றும் அவர்கள் உரையாடிய மொழி தமிழ் மொழி என்பதும் உண்மையாயினும்
இன்றுவரை எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை” எனத் தனது பழந்தமிழ் என்கின்ற
நூலில் குறிப்பிடுகிறார்.
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்,
திருக்குறள் ஆகியவற்றை ஆய்ந்தாய்ந்து அகன்ற அறிவுசான்ற சான்றோராக
ஒருபுறமும் அவற்றைப் பாரெங்கும் பரப்பும் அருந்தமிழ்த் தொண்டராக மறுபுறமும்
பேராசிரியர் சி.இலக்குவனார் திகழ்ந்தார்.
கடமையில் இருந்து வழுவாக் கல்வி
ஆசானாகவும் தமிழ்நெறியைப் போற்றும் புலமையாளராகவும் உயர்தமிழுக்கு வரும்
கேட்டினை உடைத்தெறியும் உரையாளராகவும் மக்களிடையே நல்ல தமிழைக் கொண்டு
செல்லும் இதழாளராகவும் எங்கும் தமிழை ஏற்றம் பெறச் செய்யும் போராளியாகவும்
பன்முகப்பாங்குடன் திகழ்ந்த பேராசிரியரிடம் இருந்து எளிமை, நுண்மை,
பகுத்தறிவுப்பார்வை, தமிழ் நெறிப் பின்புலம், பெண்ணுரிமை பேணல், உரையாளர்
தவறுகளை நயம்பட மறுத்தல், ஒப்புமைக் கருத்துக்களைச் சுட்டுதல்,
எக்காலத்திற்கும் ஏற்ற உரை, தனியர் தாக்குதல் இன்மை, கருத்தில் வன்மை,
நடையில் மென்மை, வகுத்தும் தொகுத்தும் விவரித்தல், சொல் விளக்கமும்
இலக்கணக் குறிப்பும், அறிவியல் பார்வை, புரட்சி எண்ணம் என என அவரிடம்
இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றது.
இரவி இந்திரன்
No comments:
Post a Comment