முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி

 இவ்வரிகள் இலக்குவனாரின் தொலைநோக்கைக் காட்டுவதாக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சி.இலக்குவனார் குறித்து எழுதியுள்ள நூலில்(பக்கம் 50) பேராசிரியர் முனைவர் இ.மறைமலை பின்வருமாறு கூறுகிறார்:
“வறியோர்க்கு உணவு, முதியோர்க்கு உணவு, கோயிலில் உணவு என்று பல்வேறு இலவச உணவுத் திட்டங்கள் இன்று நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இவை யனைத்தும் பெரும் நிதியையும் கரைக்கும் செலவினங்களாகவே அமைந்துள்ளன. ஆனால், இலக்குவனார் கனவு காணும் திட்டத்தின் மூலம் உணவைப் பெறுவோர் உடல் ஊனமுற்றோரே ஆயினும் தம்மால் இயன்ற அளவு உழைக்க வேண்டும். இங்ஙனம் உழைத்துப் பெற்ற விளைவினால் கிடைக்கும் வருவாய் மீண்டும் இத்திட்டத்திலேயே முதலீடு செய்யப்படும். இதன் விளைவாகச் செலவினம் ஒருவழிப் போக்குவரத்தாக அமையாமல், வருவாய் வழங்கித் தொடர்ந்து இத்திட்டம்நடைமுறைப்படுத்த வழிவகுக்கிறது. இன்றைய சூழ லில் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு வழிகாட்டும் வகையில் இலக்குவனாரின் தொலைநோக்கு அமைந்துள்ள தன்றோ?”
  மொழிபெயர்ப்பு நூல் நேரடி உருவாக்கம் போல் அமையாமல் புத்தாக்கமாக அமைய வேண்டும் என்பர் அறிஞர் பெருமக்கள். ஆங்கிலக் கவிஞர் கீட்சு என்பாரின் ‘இசபெல்லா’ என்னும் குறுங்காப்பியத்தைத் தமிழில் புத்தாக்கமாகப் படைத்துத் தந்துள்ளார் பேராசிரியர் சி.இலக்குவனார். இதன் மூலம் அவரின் ஆங்கிலப் புலமையும் மொழிபெயர்ப்புத் திறமையும் நன்கு பளிச்சிடுகின்றன. தமிழகச் சூழலுக்கேற்ற வகையிலும் தாம் பின்பற்றும் பகுத்தறிவு இயக்கக் கோட்பாடுகளுக்குப் பொருந்தும் வகையிலும் பெண்கல்வி, பெண்ணுரிமை, பெண் விடுதலை ஆகிய கருத்துகளைச் சங்க இலக்கிய நடையில் கண்ணகி, மணிமேகலை முதலான பெருமைமிகு பெண்டிரை நினைவுகூர்ந்து மகிழும் வகையில் இலக்கிய மேற்கோள்களை இனிதே இயம்பி எழிலரசி  மூலமாகப் போர்க்குணத்தைப் படிப்போருக்கு ஏற்றி விடுகிறார். மாணவப்பருவத்திலேயே பல புதுமைகள் நிறைந்த படைப்பை உருவாக்கித் தாம் படைப்புலகிலும் கால் பதித்த ஒரு போராளி என்பதை மெய்ப்பிக்கின்றார்.
 படிக்கும் பொழுதே சிறந்த புலமையாளர் எனப்(பெரும்புலவர்களைப் போட்டி மூலம் தேர்ந்தெடுத்துச் சிறப்பிக்கும்) புதுக்கோட்டை அரசரால் சிறப்பிக்கப் பெற்றார். ஒன்பான் இரவு (நவராத்திரி) விழாவில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற – பெரும் புலவர்கள் பலரும் பங்கேற்ற – புலமைப் போட்டிகளில் வென்றார்; விழா நிறைவில் அரசர் நாளோலக்கத்தில் பண்டிதர் என்ற விருதும் பொற்கிழியும் அளித்துச் சிறப்பு   செய்தார். பொதுவாகப் பிராமணர்களும் சமசுகிருதப் புலவர்களும் அகவையில்  மூத்தோரும் பாராட்டு பெற்ற நிலையில் தமிழ் ஆயும் தமிழ் உணர்வாளரான இளந்தமிழருக்கு இவை கிடைத்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்புதானே. படிக்கும் பொழுதே புலமை மிக்கவராக இருந்த சிறப்பு மன்னர் வரை அறிந்து போற்றப்பட, அவரை அங்கு அனுப்பிய கல்லூரியினரும் மகிழ்ந்தனர்.
 புறநிலைச் செயல்பாடுகளில் முதன்மை பெற்றதுபோல் புலவர் படிப்பிலும் முதன்மை பெற்றார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், தேர்ச்சி அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. மாநில முதல்மாணவராக மதிப்பெண் பெற்றிருந்தும் இதே மதிப்பெண்ணைப் பெற்றிருந்த மற்றொருவர் அகவை மூப்பின் அடிப்படையில் அத்தகுதியைப் பெற்றார்; அவர் முன்னரே பண்டிதர் பட்டம் பெற்றவர் என்பதால் அவர் வெற்றி பெற்றதில் வியப்பில்லை. ஆனால், பேராசிரியருக்குக் கிடைக்க வேண்டிய சிறப்பு அகவைக்கு முதலிடம் என்னும் கொள்கை அடிப்படையில் கிடைக்காமல் போனது பிற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆறாப் புண்ணாய் வாட்டியது. பேராசிரியருக்கும் பெரிதும் ஏமாற்றமாக இருந்தாலும் மீண்டும் இயல்பாகிப் பணி நாடலுக்கும் களப்பணிக்கும் ஆயத்தமாகி விட்டார்.
 புலவர் தேர்ச்சியைத் தொடர்ந்து, ஆசிரியப்பணித் தகுதிக்காக அண்ணா மலைப் பல்கலைக்கழகம் சென்று ஆசிரியப்பயிற்சி பெற்றார். பின்னர்ப் பணியில் இருந்தே படித்தும் ஆய்வேடுகள் அளித்தும் முதுகலை, கீழ்த்திசை இலக்கிய முதுகலை இயல் (எம்.ஓ.எல்/ M.O.L.), மெய்யியல் அறிஞர் (முனைவர்-பி.எச்.டி/Ph.d.) முதலான பட்டங்களைப் பெற்றார். கீழ்த்திசை இலக்கியத்தில் முதுகலை பெற்ற சிலருள் பேராசிரியரும் ஒருவர்.
 வசதி நிறைந்தவர்களுக்குக் கல்வி பொழுது போக்குபோல் அமைந்து விடுகிறது. அல்லது எச் சிக்கல் குறித்தும் கவலையின்றிப் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த முடிகின்றது. ஆனால், வசதி குறைந்தவர்களுக்குப் படிப்பது என்பதே ஒரு போராட்டம்தான். அப் போராட்ட வாழ்க்கையிலும் தமிழ் காக்கும் போர்க்களப் பணியில் கருத்து செலுத்தியவர் பேராசிரியர். தூய தமிழ்பற்றிய பரப்புரை என்பது நமக்கு இன்றைக்கு மிகவும் எளிதாகத் தோன்றும். ஆனால், மாணவ நிலையில் இருந்தே போராட்டங்கள் இடையேதான், தமிழின் தூய்மையைக் காக்கவும் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் சிறப்பைப் பற்றியும் கட்டுரைகள் எழுதியுடன் நில்லாது பரப்புரையும் மேற்கொள்ளவும் தம் வாணாளைச் செலவிட்டுள்ளார்.
  பேராசிரியரின் எதிர்காலப் போராட்ட வாழ்வின் அடிக்கல் பள்ளி வாழ்க்கையிலேயே நாட்டப்பட்டு விட்டது. பேராசிரியருக்கு அமைந்த ஒத்துழைப்பும் ஊக்கமும் நல்கிய அருமையான ஆசிரியர்கள், நீதிக்கட்சி ஆட்சியால் தன்மதிப்பினை வளர்க்கும் தஞ்சாவூர் மண் முதலானவை பேராசிரியரின் எண்ணங்களுக்கு அரண் செய்தன. எனவே வறுமைப் போரிலும் சாதிப்போரிலும் எதிர்நீச்சல் போட அவரால் முடிந்தது; எத்தனையோ இடையூறுகள் வந்தபோதும் இடைவெளி  விட்டேனும் கல்வியைத் தொடர அவரால் இயன்றது; வேறு துறைக்கோ பிற பணிக்கோ செல்லும் வாய்ப்பு இருப்பினும் தமிழின்பால் அவர் கொண்ட காதல் தமிழையே படிக்கச் செய்தது; தமிழ்ச்சிறப்புகளைப் பிற மொழியினர் அறியச் செய்ய வேண்டும் என்னும் பேராவல் பிற மொழிகளையும் நன்கு கற்கச் செய்தது;  மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டு மேலும் மேலும் தமிழின் மேன்மைகளை வெளிவரச் செய்யும் புலமையைத் தந்தது; எழுத்துப்பணி, சொற்பொழிவுப் பணி என்பனவற்றில் அமைதி கொள்ளாது மக்களிடையே மக்களாக இருந்து போராடி மக்களுக்கு வழிகாட்டி மக்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்தச் செய்தது. தமிழுக்காகத் தன்னை ஈந்த போராளியாகவே பேராசிரியர் பிறரால் மதிக்கப் பெறும் நிலை வந்தது.
(தொடரும்) 
இலக்குவனார் திருவள்ளுவன்