முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி

 படிப்பு, பரப்புரை ஆகியவற்றுடன் படைப்புப் பணியிலும் பேராசிரியர் இலக்குவனார் ஈடுபட்டார். பண்டைநலம், புதுப்புலமை, பழம்பெருமை அனைத்தையும் நல்கிய படைப்புப் போராளியாகவும் பேராசிரியர் தம்மை வெளிப்படுத்தி உள்ளார். கல்விக்கூட அளவில் கவிதைகளும் இதழ்கள் வழிக் கட்டுரைகளும் படைத்த பேராசிரியர் வித்துவான் தொடக்கநிலை மாணவராக இருந்த பொழுதே சிறந்த நூலாசிரியராகவும் மொழிபெயர்ப்பு வல்லுநராகவும் திகழ்ந்துள்ளார்; ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் கதைப்பாடலை இயற்றினார். தனித்தமிழ்க் குறும்பாவியமாகவும் பெண்களுக்குச் சொத்துரிமை, கூட்டு உழைப்பு முதலானவற்றை வெளிப்படுத்தும் சீர்திருத்தக் காவியமாகவும் மொழிபெயர்ப்புப் படைப்பாகவும் இலக்கிய மேற்கோள்கள் நிறைந்த இலக்கியமாகவும் பாவியல் புதினமாகவும்  சிறந்து அனைவரின்  வரவேற்பையும் பெற்றது இந்நூல். எளிய இனிய தூய தமிழில் படைத்ததால் படிப்பவர்கள் உள்ளத்தில் இவை நன்கு பதிந்தன.
  பாவேந்தர் பாரதிதாசன் தனித்தமிழ்ப்படைப்பாளராக விளங்கும் முன்னரே பேராசிரியர் முன்னோடியாகத் திகழ்ந்ததைக் கவிஞர் சுரதா முதலானவர்களும் ஆய்வாளர்களும் பாராட்டி உள்ளனர்; இப்போதைய ஆய்வாளர்களும் பாராட்டி வருகின்றனர். தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டுத் தூய தமிழ் போற்றும்  ஆசிரியர்களால் கற்பிக்கப்பெற்ற பேராசிரியர், தம் கொள்கை வழியில் தூய தமிழ் இலக்கியம் படைத்ததில் வியப்பில்லை.
 இக்குறுங்காவியத்தில் இருந்து சில பாடலடிகளைப் பார்ப்பது உலக நலனில் ஈடுபாடு கொண்ட பேராசிரியரின் பொதுமைப் பண்பை விளக்குவதாக அமையும்.
 “பிறந்தோர் இறப்பது பெரிது மறிவாய்
 இறந்தோர் பொருட்டு ஏங்கிப் புலம்பி
 உடலும் உளமும் ஒருங்கே வாடி
 மாளும் வரையில் மகிழ்வு மற்று
 இறந்தோர் பலரும் எய்திய தென்னோ?
 இன்னும் சிலநாள் இருந்து மறைவோன்
 இன்னே மறைந்தனன் இதுவும் வியப்போ
 உலகிற் பிறந்த ஒவ்வொரு வருமே,
 ஒவ்வொரு தொண்டு செவ்விதி னாற்றக்
 கடப்பா டுடையர்; இடர்ப்பட நேரினும்
 அண்மையி லிறப்போர், அவர்க்குள தொண்டை
 இந்நில வுலகை இருந்ததில் உயர்த்த
 இயற்றும் பெற்றியை இழந்தோ ராவர்
 அன்னவர் பொருட்டு அழுது, மாய்வரும்
 அன்னோர் போல ஆற்றா திழப்பர்
 இறந்தோர் இழப்பதும் இயல்பே; இருந்தும்
 இழப்பின் எள்ளற் குரித்தே; எவர்க்கும்
 இன்பமும் துன்பமும் இதயமே யளிக்கும்
 வருந்துவ தொழித்துத் திருந்திய வுளத்துடன்
 இல்லிற் கேக எழுவாய் தோழீஈ”
 (எழிலரசி அல்லது காதலின் வெற்றி : அடிகள் 382-401)
 முன்னோர் வழியில் நிலையாமையை உரைக்கும் பேராசிரியர் தம் வழியில், உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தொண்டாற்றுவதே கடமை எனக் கொண்டு வாழ வலியுறுத்தியும் இக்கடமையை ஆற்றாமல், இறப்பைத் தாமே தேடிச் செல்வது தவறு என்றும் வாழ்வின் பயனையும் தற்கொலை எண்ணம் உடையோருக்குத் தன்னம்பிக்கையையும் சிறப்பாகத் தெரிவிக்கின்றார். செல்வத்துப் பயன் ஈதல் என்பதைச் செல்வர்களால்தானே பின்பற்ற இயலும். ஆனால், பிறப்பின் பயன் தொண்டாற்றுதல் என்பதை உலகில் பிறந்த யாவரும் எச்சூழலிலும் பின்பற்ற இயலும் அல்லவா? மாணவ நிலையிலேயே மிகச் சிறந்த சிந்தனையாளராக இருந்தார் என்பதைப் பார்க்கும் பொழுது கருவிலே திருவுடையராகப் பேராசிரியர் இலக்குவனார் திகழ்ந்துள்ளார் என உணரலாம்.
 இக் குறுங்காவியத்தில் ஆய்வாளர்கள் அனைவராலும் போற்றப்படுகின்ற வேறு சில பாடலடிகளையும் பார்ப்போம்.
 காணார் கேளார் கால்முடப் பட்டோர்
 பிணிநடுக் குற்றோர் புகலிடம் அற்றோர்
 ஆடை யின்றி வாடையின் மெலிந்தோர்
 உண்டி யின்றி ஒட்டிய வயிற்றினர்
 குடிசை யின்றிக் குரங்கென வதிவோர்
 வேலை யற்று வீணராய்த் திரிவோர்
 முதலிய மக்களை இதமுடன் கூட்டி
 “உலகை யியக்கும் ஒருபெரும் கடவுள்
 பசியே என்பதைப் பகர்தலும் வேண்டா
 அப்பசி வெல்லும் ஆற்றலும் அற்றோம்;
 எம்முடைச் செல்வம் நும்முடைத்தாகச்
 செய்து அன்புடன் சேர்ந்தே உழைப்போம்
 உழைப்பின் பயனையும் ஒருங்கே துய்த்து 
 எஞ்சிய பகுதியை எய்ப்பில் வைப்பாய்க்
 கொண்டு வாழக் கூடுவீ ராக”             (எழிலரசி : அடிகள் 542-557)
 என்கிறார் பேராசிரியர். பொதுவுடைமைக் கருத்துகள் மிகுதியும் பரவாத அக் காலத்திலேயே, கூட்டுடைமை பற்றி யாரும் எண்ணியிராத பொழுதே, பசியே கடவுள் எனக் கூறிப் பசியை வெல்ல சேர்ந்தே உழைத்து ஒருங்கே துய்த்து எஞ்சியதைச் சேமித்துக் கூடி வாழ அவர் கூறும் அறிவுரை, மிகச்சிறந்த சிந்தனை வளத்தை வெளிப்படுத்துகின்றது அல்லவா?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்