Tuesday, November 01, 2011

பாதியில் முடிந்த பயணம் - கிருட்டிணன் நம்பி!

First Published : 30 Oct 2011 03:08:23 AM 


தமிழில் குழந்தைகளுக்காகக் கவிதை, கதை எழுதியவர்கள் மிகக் குறைவு. இதில் குழந்தைகள் விரும்பியபடி எழுதிய எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு. அந்த மிகக் குறைவானவர்களுள் குறிப்பிடத்தக்கவர் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்துள்ள அழகிய பாண்டியபுரத்தில் 1932-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதி பிறந்தார். கிருஷ்ணன் நம்பியின் இயற்பெயர் அழகிய நம்பி. இது இவருடைய தந்தைவழிப் பாட்டனார் பெயர். இவருடைய தந்தை கிருஷ்ண அய்யர் - தாயார் கமலாக்ஷி அம்மாள். முதல் குழந்தையான கிருஷ்ணன் நம்பியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு சகோதரர் இரண்டு சகோதரிகள். அழகியபாண்டியபுரத்தில் விவசாயம் செய்துவந்த கிருஷ்ண அய்யர்தான் நாகர்கோவில் பகுதியில் முதன்முதலாக உரக்கடையைத் தொடங்கியவர். உர வியாபாரம் நன்றாக நடைபெறவே 1941-ஆம் ஆண்டு நம்பியின் தந்தை அழகிய பாண்டியபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு குடும்பத்தை மாற்றினார். நாகர்கோவிலில் உள்ள எஸ்.எம்.ஆர்.வி உயர்நிலைப் பள்ளியிலும் சேது லெட்சுமிபாய் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். படிப்பில் ஆர்வமற்றவராகவே கிருஷ்ணன் நம்பி இருந்தார். பள்ளி இறுதி வகுப்பில் இரண்டாவது முறையாகத்தான் அவரால் தேர்ச்சி பெறமுடிந்தது. பின்பு, நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படித்தார். அதில் இறுதித் தேர்வில் அவரால் தேர்ச்சிபெற முடியவில்லை. அத்துடன் அவரது படிப்பு ஒரு முடிவுக்கு வந்தது.சிறு வயதிலேயே நூலகம் சென்று படிக்கும் பழக்கம் கிருஷ்ணன் நம்பிக்கு இருந்தது. அக்காலத்தில் ஆனந்தவிகடனில் வந்த குழந்தைப் பக்கங்கள் நம்பிக்கு இலக்கியத்தின் வாசலைத் திறந்துவிட்டன. பள்ளியில் இவருடைய வகுப்புத் தோழராக இருந்தவர் எழுத்தாளர் மா.அரங்கநாதன். இருவரும் சேர்ந்து அக்கால கட்டத்தில் வந்த துப்பறியும் கதைகளைப் போலவே எழுதிப் பார்த்தனர். கிருஷ்ணன் நம்பி எழுதி முதலில் பிரசுரமானது ஒரு கட்டுரைதான். நாட்டுப்பாடல்கள் குறித்த அந்தக் கட்டுரை வை.கோவிந்தன் நடத்திய "சக்தி' இதழில் பிரசுரமானது. கி.வா.ஜ. ஆசிரியராக இருந்த "கலைமகள்' இதழின் குழுவைச் சார்ந்தவர்கள் "கண்ணன்' என்ற குழந்தைகள் இதழினையும் நடத்தினர். எழுத்தாளர் ஆர்.வி.தான் அதன் ஆசிரியர். நம்பியின் பல குழந்தைக் கவிதைகள் இந்த இதழில்தான் பிரசுரமாயின. கிருஷ்ணன் நம்பி மிகச்சிறந்த குழந்தை எழுத்தாளராக ஆர்.வி.யால் அடையாளம் காணப்பட்டார். கிருஷ்ணன் நம்பி குழந்தைக் கவிதைகளை "சசிதேவன்' என்ற புனைபெயரில் எழுதினார். "கிளிப்பண்டிதர்' என்ற பெயரில் குறிப்புகளையும் "சாது சாஸ்திரி' என்ற பெயரில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த நம்பியை, நம்பியின் தந்தை தன்னுடைய வியாபாரத்தை கவனிக்க வேண்டி கட்டாயப்படுத்தினார். ஆனால், நம்பியால் வியாபாரத்தில் நாட்டம் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து இலக்கியத்தின் வழியே இவரின் மனம் செல்லத் தொடங்கியது. கண்ணன் இதழில் வெளிவந்த இவரின் கவிதைகள் இவருக்குப் புது உற்சாகத்தைக் கொடுத்தன. கண்ணன் இதழைத் தொடர்ந்து தொ.மு.சி.ரகுநாதன் ஆசிரியராக இருந்த சாந்தி, வ.விஜயபாஸ்கரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த சரஸ்வதி, ப.ஜீவானந்தம் ஆசிரியராக இருந்த தாமரை ஆகிய இதழ்களில் இவருடைய கதைகள் பிரசுரமாயின. இவர் எழுதிய முதல் கதை "நீலக்கடல்' என்றாலும், "சுதந்திர தினம்' என்ற கதைதான் சரஸ்வதி இதழில் முதலில் பிரசுரமானது. கிருஷ்ணன் நம்பி இக்கால கட்டத்தில்தான் தன்னை ஓர் எழுத்தாளராக நிலை நிறுத்திக்கொண்டார். சாந்தி, சரஸ்வதி, தாமரை தவிர, கணையாழி, கலைமகள், சதங்கை, கல்கி, ஆனந்தவிகடன் முதலிய இதழ்களிலும் இவருடைய படைப்புகள் பிரசுரமாயின. கதை, கவிதை எழுதுவதைத் தவிர இசையிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார். புதுமைப்பித்தன் நினைவு மலர் ஒன்றை எழுத்தாளர் சுந்தர ராமசாமி கொண்டுவந்தபோதுதான் கிருஷ்ணன் நம்பிக்கும் சுந்தர ராமசாமிக்கும் நட்பு ஏற்பட்டது. சுந்தர ராமசாமியுடனான நட்பு கிருஷ்ணன் நம்பிக்கு எல்லாவகையிலும் பலம்வாய்ந்த ஒன்றாக இருந்தது. இலக்கியத்தின் ஆழத்தையும் விரிவையும் கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமியின் மூலமாகக் கண்டிருக்கிறார். நம்பிக்கு இயல்பாகவே இருந்த இசையார்வமும் இலக்கிய தாகமும் இருவரும் சுமார் 25 வருடங்கள் நண்பர்களாகத் தொடர காரணமாக இருந்திருக்கின்றன. கிருஷ்ணன் நம்பி, 1958-ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் பார்த்து முடித்தத் திருமணம். அப்பாவின் உர வியாபாரத்தில் விருப்பமில்லாததால் "நவசக்தி' இதழில் மாதம் எண்பது ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தார். இக்கால கட்டத்தில்தான் கிருஷ்ணன் நம்பிக்கு சென்னையிலிருந்த ஜீவாவின் நட்பு கிடைத்தது. உள்ளூர்க்காரர் என்பதால் ஜீவாவுக்கும் நம்பியிடம் அன்பு அதிகம். நம்பியின் கதைகளை ஜீவா கேட்டு வாங்கி தாமரை இதழில் பிரசுரம் செய்தார். ஒரு கட்டத்தில் வேலையை விட்டு நாகர்கோவில் திரும்பினார். ஊருக்குத் திரும்பி சிறிது காலம் அழகிய பாண்டியபுரத்தில் விவசாயம் செய்தார். பின்னாளில் அவரது தந்தையின் உடல்நிலை மோசமானதால் மொத்த நிர்வாகத்தையும் நம்பியே கவனிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.இதற்கிடையில், சார்கோமா என்னும் எலும்பு மஜ்ஜையைத் தாக்கும் நோயால் கிருஷ்ணன் நம்பி பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். கவனிக்கப்படாத இப்புற்றுநோயின் காரணமாக 1974-ஆம் ஆண்டு கிருஷ்ணன் நம்பியின் இடது காலை அறுவை சிகிச்சை செய்து எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. காலை எடுத்தபிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் நம்பி உயிருடன் இருந்தார். பின்னர், 1976-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி கிருஷ்ணன் நம்பியின் உயிர் பிரிந்தது. கிருஷ்ணன் நம்பிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்.கிருஷ்ணன் நம்பியின் 39 குழந்தைப் பாடல்களையும் தொகுத்து, 1965-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகாலயம் "யானை என்ன யானை' என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்தது. "நீலக்கடல்' என்ற கதைத்தொகுப்பை 1965-ஆம் ஆண்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டது. "காலை முதல்' என்ற கதைத் தொகுப்பை 1966-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி புத்தக நிலையம் கொண்டு வந்தது. இந்த இரு தொகுப்புகளையும் சேர்த்து ஸ்நேகா பதிப்பகம், "கிருஷ்ணன் நம்பி கதைகள்' (1995) என்ற பெயரில் ஒரே தொகுப்பாகப் பதிப்பித்தது.இவை தவிர, கிருஷ்ணன் நம்பி படைப்புலகம் என்கிற நூல் அவரது தம்பி கே.வெங்கடாசலத்தால் 2001-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இறுதியாக, கிருஷ்ணன் நம்பியின் அனைத்துப் படைப்புகளையும் ராஜமார்த்தாண்டன் தொகுத்து "கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்' என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகம் மூலமாக வெளியிட்டுள்ளார்.குழந்தைகள் உலகத்தை தம் படைப்புகளின் மூலமாக மீட்டெடுக்க முயன்ற கிருஷ்ணன் நம்பியின் எண்ணம் முழுமையடையும் முன்பே புற்றுநோய்க்கு தன் உடலைத் தின்னக் கொடுத்தார். "யானை என்ன யானை' என்ற ஒற்றைக் கவிதைத் தொகுப்பின் மூலமாக குழந்தைகளின் மனங்களை வசீகரித்த கிருஷ்ணன் நம்பியின் பயணம், இலக்கை அடையாமல் பாதியிலேயே முடிந்துபோனது.

No comments: