Thursday, November 17, 2011

வான்புகழாளர்கள்

  1.பெரும்போராளி 

பேராசிரியர் சி.இலக்குவனார்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 17/11/2011



(தமிழ் வளர்த்து நினைவில் வாழும் புகழ்வாணர்கள் பற்றிய தொடர் இத்தலைப்பில் வெளிவரும். அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள் பற்றிய தொடர் வண்டமிழ் வலவர்கள் என்னும் தலைப்பில் வரும். அறிஞர்கள் பற்றித் தெரிவிக்க விழையும் குறிப்புகள் இருப்பின் நட்பு இணைய இதழுக்கு அனுப்ப வேண்டுகின்றோம். – ஆசிரியர்)
1. பெரும்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்
வையம் உள்ளளவும் வாழும் வளர்தமிழுக்கு வாழ்வு தந்த வான்புகழாளர்கள் எண்ணற்றோர் உள்ளனர். கடந்த நூற்றாண்டில் தங்கள் எழுத்தால் தமிழை நிலைக்கச் செய்த சான்றோர்கள் மிகுதியாக உள்ளனர். எண்ணம், சொல், எழுத்தால் மட்டுமன்றித் தம்முடைய செயல்பாட்டால் தமிழுக்குக் கேடயமாக விளங்கிய பெரும் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் எனல் பொருந்தும். உலகில் நாட்டு நலனுக்காக, மக்கள் நலனுக்காக எனப் போராடிச் சிறை சென்ற செம்மல்கள் பலர் உள்ளனர். ஆனால், மொழிக்காகச் சிறைவாழ்வை ஏற்ற ஒரே கல்வியாளராகப் பேராசிரியர் திகழ்கிறார். அயல் மொழிகளால் தமிழுக்கு ஏற்படும் சிதைவுகளை எழுத்தாலும் உரையாலும் களைந்த அறிஞர்களிடையே களம் பல கண்டு தமிழியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய ஆன்றோர் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள்.
பள்ளிஇறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற பேராசிரியர் சுற்றத்தார் தெரிவித்தவாறு கலைஅறிவியல் கல்லூரியில் சேர்ந்திருக்கலாம். அல்லது பணியில் சேர்ந்திருக்கலாம். ஆனால், தம்முடைய தமிழாசிரியர் உயர்மிகு பொன்னண்ணாக்களத்தில்வென்றார் ஆற்றுப்படுத்தியவாறு புலவர் பட்டம் பெற விரும்பித் திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரியில் சேர்ந்தார். அவ்வாறு அவர் வேறு வகையாக முடிவெடுத்திருப்பின் பல உயர்நிலைகளை அடைந்திருக்கலாம். ஆனால், தமிழ் உயர்நிலையடைய தமிழ்த்தாய் அவரைப் புலவர் மாணாக்கராக அழைத்துக் கொண்டாள். புலவர் படிப்பில் பேராசிரியர் காட்டிய ஆர்வமும் ஆழ்ந்த கல்வியும் அவரை மெருகேற்றியதுடன் தமிழன்னையின் மீது சிலர் பூசிவரும் கறைகளையும் போக்க உதவியது. கல்லூரி நூலகத்தில் உள்ள மொழியியல் தொடர்பான ஆங்கில நூல்கள் அனைத்தையும் படித்ததால், அந்த நூற்றாண்டில் மேனாட்டு அறிஞர்கள் கூறிய கருத்துகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப்புலவர்கள் தெரிவித்திருந்த சிறப்பை உணர்ந்தார். எனவே, அவற்றைப் புலப்படுத்த உறுதி கொண்டு பணியாற்றினார்.
தொல்காப்பியம் கற்றறிந்தவர்களிடையேயே அறிமுகமாகா அக்காலத்திலேயே தொல்காப்பியச் சிறப்புகளைப் பிறருக்கு உணர்த்தினார். தொல்காப்பிய உரை விளக்கங்கள் அளித்தார். தமிழ்நாட்டு வரலாற்றினை எழுத விரும்புவோர் தொல்காப்பியத்தைக் கற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தொல்காப்பியச் சிறப்புகளை உரை வாயிலாகவும் கட்டுரைகள் வாயிலாகவும் பரப்பினார். தொல்காப்பியத்தின் காலம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பின்னர் மேல்வரம்பு கி.மு.10 ஆம் நூற்றாண்டு எனவும் கீழ் வரம்பு கி.மு.7 ஆம் நூற்றாண்டு எனவும் வரையறுத்தார்.
அயல்நாட்டினர் அருந்தமிழ்ச் சிறப்பை உணர வேண்டும் என்பதற்காக ஆங்கில நூல்களையும் எழுதினார். தமிழின் தோற்றமும் வளர்ச்சியும் (Origin and Growth of Tamil) என்னும் நூல் மூலம் இயற்கை மொழியாய்த் தமிழ் தோன்றி வளர்ந்த வரலாற்றையும் அதன் செம்மொழிச் சிறப்பையும் விளக்கினார்.
சிறப்பு மிக்க தமிழ் இலக்கணத்தை எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழ் இலக்கண ஆக்கம் (The Making of Tamil Grammar) என்னும் நூலை வெளியிட்டார்.
தமிழ்ச்சொற்களின் சிறப்பையும் தொன்மையையும் புரிந்து கொள்ளும் வகையில் ‘தமிழ்ச்சொற்கள் பற்றிய ஆய்வுச் சுருக்கம்-இலக்கணப் புலவர்களின் காலமுறைமை’ (A Brief Study of Tamil Words-The Chronology of Tamil Grammarians) என்னும் ஆய்வேட்டை வெளியிட்டார். இவ்வாய்வேட்டின் மூலம், ஆரியச் சொற்கள் எனத் தவறாகக் கருதப்பட்டுவந்த சொற்கள் பலவற்றின் தமிழ் மூலத்தையும் தமிழ்ச் சொற்களின் மூலத்தைக் கொண்ட ஆரியச் சொற்களையும் உணர்த்தித் தமிழ்ச் சொல் வளத்தை வெளிப்படுத்தினார்.
19, 20ஆம் நூற்றாண்டு மேனாட்டு மொழியியலறிஞர்கள் கருத்துகளோடு ஒப்பிட்டுத் தமிழின் மொழியியல் சிறப்பை விளக்கும் வகையில் மொழியியல் நூல்களையும் வெளியிட்டார். தமிழ்மொழியின் முதல்நிலைச்சொற்களும் இடைநிலைச் சொற்களும் (Semantemes and Morphemes in Tamil Language), ஒலியனியல் (Phonetics), சொல்லியல் (Semantics), முதலான நூல்களை வெளியிட்டார். பின் இவற்றைத் தொகுத்தும் பகுத்தும் தமிழ் மொழி (Tamil Language)என்னும் நூலை வெளியிட்டார். இவற்றின் மூலம் தமிழின் தனித்தன்மையைப் பேராசிரியர் நன்கு எளிமையாயும் செறிவாயும் விளக்கியுள்ளார். ஓரளவு ஆங்கில அறிவு உடையவர்கள்கூடப் பெரிதும் பயனுறும் வகையில் இந்நூல்கள்அமைந்துள்ளன என அறிஞர்களால் பெரிதும் இவை போற்றப்பட்டன.
பேராசிரியரின் நூல்களுள் மகுடமாக அமைந்தது, அவரது தொல்காப்பிய ஆங்கில மொழி பெயர்ப்பும் ஆராய்ச்சி உரையும் (Tholkappiyam in English with Critical Studies) ஆகும். தமிழகத்தின் பண்பாட்டு வாயிலான தொல்காப்பியத்தை இன்றைக்கும் பன்னாட்டினரும் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ள சிறப்பு மிக்க நூல் இதுவே ஆகும்.
இவ்வாறாக அன்னைத் தமிழின் சிறப்பை அனைத்து நாட்டினரும் தெரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் ஆங்கிலத்தில் சிறப்பான நூல்களை அளித்த மேதை இலக்குவனார் அவர்கள் தமிழ் மக்களுக்காகத் தமிழிலும் பல நூல்களைப்படைத்து அளித்துள்ளார்.
புலவர் மாணாக்கராக இருந்த பொழுதே சிறந்த படைப்பாளராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி‘ என்னும் அவருடைய தனித்தமிழ்க் கதைப்பாவியம் அக்காலச் சீர்திருத்தப்படைப்புகளிலும் தனித்தமிழ்ப்படைப்புகளிலும் மொழிபெயர்ப்புப் படைப்புகளிலும் முதலிடத்தைப் பெற்றதென ஆராய்ச்சியாளர்களால் போற்றப்படுகிறது.
பேராசிரியரின் வாழ்க்கையின் ஒரு பகுதியை – கல்லூரிப்பணியினின்று நீக்கப்பட்ட அவலத்தை – மரபு நடையிலும் புதுக்கவிதைப் போக்கிலும் எழுதிய ‘துரத்தப்பட்டேன்’ என்னும் பாவியம் அக்காலத்தில் அனைத்துத் தரப்பினரின் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது. ‘என் வாழ்க்கைப்போர் (இளமைப்பருவம்)’ என்னும் தன்வரலாற்று நூல் பேராசிரியரின் தமிழ்ப்போர்க்களத்தைக் காட்சிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சங்க இலக்கியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றிய பேராசிரியரின் ‘‘அம்மூவனார், மாமூலனார் காதல் காட்சிகள்(சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்), இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’’ ஆகியன சங்க இலக்கியச் சிறப்புகளை ஆழமாகவும் எளிமையாகவும் மக்களிடையே உணர்த்தின; பழந்தமிழர் உயர்வைப் பாரறியச் செய்து வருகின்றன.
குறட்பணியை வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த பேராசிரியரின் ‘‘அமைச்சர்யார்?, எல்லோரும் இந்நாட்டுமன்னர், திருக்குறள் எளிய பொழிப்புரை, வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம்’’ முதலானவை பல்வேறு கண்ணோட்டங்கள் வாயிலாக வள்ளுவத்தை மக்களிடையே பரப்புவதில் வெற்றி கண்டன. பின் மூன்று நூல்கள் இன்றைக்கும் திருக்குறளை வழிகாட்டியாகக் கொள்வதற்கு வரவேற்பைப் பெற்று வருகின்றன.
‘‘தொல்காப்பிய ஆராய்ச்சி, பழந்தமிழ்,’’ ஆகிய நூல்கள் பழந்தமிழ் வளத்தையும் நலத்தையும் நன்கு அறிய உதவுகின்றன.
‘தமிழ் கற்பிக்கும் முறை’ தமிழைப் பிழையின்றியும் எளிமையாகவும் அயல் மொழியினரும் கற்கும் வகையிலும் தமிழ் கற்பிக்க தக்க வழிகாட்டிநூலாக அமைந்தது.
கருமவீரர் காமராசர் பற்றி அறியவும், அரசு தமிழுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை அறிவுறுத்தவும் அமைந்த நூலே பேராசிரியரின் ‘கருமவீரர் காமராசர்’ என்னும் நூலாகும்.
தமிழிசைப்பாடல்கள், ‘மாணவர் ஆற்றுப்படை’, வாழ்த்துப்பாக்கள், நினைவுப் பாக்கள் முதலான பல வகையிலும் அமைந்த பாடல்கள் ஆகியன பேராசிரியரின் பாடற்புலமைக்குத் தக்க சான்றுகளாகும்.
இதழ்களிலும் மலர்களிலும் வெளிவந்துள்ள பேராசிரியரின் கட்டுரைகளும் தமிழையே மூச்சாகக் கொண்ட அவரின் சீர்மையையும் நுண்மையையும் விளக்குவனவாக அமைந்துள்ளன.
படிப்போரை மட்டும் பாங்குற வழிநடத்தும் படைப்புப் பணியுடன் பேராசிரியர் நின்று விடவில்லை. ‘‘சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு, Dravidian Federation, Kuralneri’’ முதலான பல இதழ்கள் நடத்தியும் பொதுமக்களிடம் தமிழ்ச்சிறப்பையும் தமிழுக்கு நேர்ந்து வரம் தீங்குகளையும் அவற்றைக் களைய வேண்டிய கடமைகளையும் விளக்கினார். அவரது மக்கட் பணியே ‘தமிழர் தளபதி’ எனத் தந்தை பெரியாரால் அவரைப் போற்றச் செய்தது.
தாம் பணியாற்றிய நகர்கள் யாவிலும் தமிழ் அமைப்புகள் நிறுவி இலவசத் தமிழ் வகுப்புகள் நடத்திப் பொதுமக்களிடம் தமிழ்க்கல்வி மீதான ஈடுபாட்டை உருவாக்கினார். தமிழ் வழிக்கல்விக்காகவும் அன்னைத் தமிழே அனைத்திலும் முதன்மை பெற வேண்டும் என்பதற்காகவும் முழக்க ஊர்வலங்கள் நடத்தியும் தமிழ்மறுமலர்ச்சி விழாக்களையும் புலவர்களைப் போற்றும் விழாக்களையும் நடத்தியும் தமிழ்க்காப்பினை மக்கள் இயக்கமாக மாற்றினார். பேராசிரியர் நிறுவித் தலைமை தாங்கிய தமிழ்க்காப்புக்கழகத்தின் செயற்பாடுகள் இந்தித்திணிப்பை எதிர்ப்பதில் மாணவர்களையும் இளைஞர்களையும் பொதுமக்களையும் ஈடுபடச் செய்தன. தமிழ் உரிமைப் பெருநடைப்பயணத்தால் பேராசிரியர் தளையிடப்பட்டுப் பதவியை இழந்தாலும் சிறை மீண்டபின்பும் வாழ்நாள் இறுதிவரையும் தமிழ்ப்பணியையே தொடர்ந்தார்.
கல்விப்பணியுடன் தமிழ்நலப்பணிகளையும் ஆற்றிய ஒரே பேராசிரியராக முத்தமிழ்ப் போர்வாள் முதுபெரும் புலவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் திகழ்ந்ததால்தான் வான்புகழ் கொண்டு வையகமெங்கும் சிறப்பிக்கப்படுகிறார்.
பேராசிரியர் இலக்குவனார் கார்த்திகை முதல்நாள்(தி.பி.1940) நவம்பர் 17 ஆம் நாள்(கி.பி.1909) பிறந்தார். இவ்வாண்டும்(தி.பி.2042,கி.பி.2011) இரு நாள்களும் இணைந்து வந்துள்ளன. இந்நாளில் பேராசியரின் தமிழ் பரப்பிய தகைமையையும் போர்ப்பண்பையும் நாமும் கொண்டு தமிழ் சிறக்கவும் தமிழர் தன்னுரிமையுடன் திகழவும் உலகத் தமிழர் உயரவும் பாடுபட உறுதி கொள்வோம்.

No comments: